சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய கும்பல் வீடியோ வைரல் கணியம்பாடி அருேக

வேலூர், ஜூன் 25: வேலூர் அருகே கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்களை கும்பல் சரமாரி தாக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி செல்லும் சாலையில் கணியம்பாடி அருகே வல்லம் பகுதியில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு 2 கார்களில் வந்தவர்கள், டூவிலர்கள் செல்லும் வழித்தடத்தில் டோல்கேட்டை கடக்க முயன்றனர். இதை பார்த்த சுங்கச்சாவடி ஊழியர்கள், கார்கள் செல்லும் வழித்தடத்தில் வந்து டோல்கேட் கட்டணம் செலுத்திவிட்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 2 கார்களில் இருந்தவர்கள் டோல்கேட் ஊழியர்களிடம் நாங்கள் யார் தெரியுமா? எங்கிட்ட பணம் கேட்கிறே எனக்கூறி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் காரில் வந்தவர்களில் சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 கார்களில் இருந்தவர்கள் கீழே இறங்கி, கட்டணம் கேட்டு தாக்குவீங்களா? எனக்கூறியபடி சுங்கச்சாவடி ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியை புறக்கணித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் செய்து வைத்தனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

74 நிறுவனங்கள் ₹860.51 கோடி முதலீடு கலெக்டர் சுப்புலட்சுமி தகவல் வேலூர் மாவட்டத்தில்

கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது கர்நாடகா மதுபாக்கெட்டுகள் பதுக்கி விற்ற

அரசு உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு ஜவ்வாதுமலை அடுத்த அரசவெளி