சுங்கச்சாவடி அலுவலகத்தை லோடு வாகன உரிமையாளர்கள் முற்றுகை செங்கம் அருகே பரபரப்பு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை கேட்டு

செங்கம், செப்.27: செங்கம் அருகே உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கக்கோரி சுங்கச்சாவடி அலுவலகத்தை லோடு வாகன உரிமையாளர்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் கிராமத்தில் ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த சுங்கச்சாவடி கடந்த 20 நாட்களுக்கு முன்பு திடீரென திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. திடீரென திறக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியால் அன்று முதலே விவசாயிகள், வியாபாரிகள் என பல தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். பால், காய்கனி போன்ற சிறு, குறு வியாபாரிகளின் வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக சென்று வரும்போது அதிக செலவினம் ஆவதாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ெசங்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிறு லோடு வாகன உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது வாகனங்களுடன் சென்று கரியமங்கலம் சுங்கச்சாவடியை திடீரென முற்றுகையிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுங்கச்சாவடியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் தங்களது ஆதார் எண்ணை காண்பித்து இலவசமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சுங்கச்சாவடியில் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என தட்டிக்கழிக்கின்றனர். உள்ளூர் பொதுமக்களுக்கு எந்தவித சலுகையும் கிடையாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மாறாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதை மறுபரிசீலனை செய்து சலுகை கட்டணம் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். அதற்கு சுங்கச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது