Tuesday, July 9, 2024
Home » சீதையின் அரண்மனை!!

சீதையின் அரண்மனை!!

by kannappan

நேபாளம் – ஜனக்பூர்தாம்அற்புதமான யாகம் ஒன்றை நடத்துவதற்காக ஒரு பரந்த இடத்தில், ஏர் ஒன்றைப் பிடித்து உழுதுகொண்டிருந்தார்  ஜனகன்.  அப்போது ஏர்முனையில் ஏதோ தட்டுப்படவே அதை எடுத்துப் பார்த்தார். அழகான வேலைப்பாடுகள் நிறைந்த பெட்டி ஒன்று அவர் கைக்கு கிட்டியது. அதைத் திறந்து பார்த்தார். அதன் உள்ளே ஒரு பெண் குழந்தை சிரித்தப்படி இருந்தது. நிலவைப் போன்று ஒளிவீசிய அப்பெண் குழந்தையைத் தன்மகள் என்ற உணர்வுடன் கொண்டுவந்து அவருடைய அன்புக்குரிய மனைவியிடம் ஒப்படைத்தார் ஜனகர்.ஒருசமயம் அவர் தனிமையில் அமர்ந்து கொண்டு, நாட்டு நடப்புகளைத் தனது சிந்தனையில் வைத்துக்கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று நினைத்தபொழுது, எதிர்பாராதவிதமாக, ‘மஹதீ’ என்ற தன்னுடைய வீணையை மீட்டிக் கொண்டு நாரதமுனிவர் எதிரே வந்து நின்றார். அவரை வரவேற்று உபசரித்து ஒரு ஆசனத்தில் அமர வைத்தார், ஜனகர். உவகை நிறைந்த உள்ளத்துடன் நாரதர் ஜனகரைப் பார்த்து ‘‘நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். கேளுங்கள்’’ என்றார். ஜனகரும் ஆர்வத்துடன் கேட்டார்.‘‘ஜனகரே! சர்வ வல்லமை படைத்தபரமாத்வான மஹாவிஷ்ணு, அடியார்களுக்கு அருள்புரிய வேண்டும் என்றும், தேவர்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டுமென்று,  அதற்காக இராவணனை வதம் செய்ய வேண்டுமென்று, மாயையாக மானிட வேடம் தாங்கி ஸ்ரீராமன் என்ற பெயரில் தசரத மகாராஜாவுக்கு புத்திரனாகஅவதாரம் செய்யப்போகிறார். இப்போது உன்னுடைய மாளிகையில் சீதை என்ற பெயரில் மஹாலட்சுமி யோகமாயை ஒரு பெட்டியில் தோன்றியிருக்கிறாள். ஆகவே, நீ கண்டிப்பாக ஸ்ரீராமனுக்கே சீதையை திருமணம் செய்து வைப்பாயாக வேறு யாருக்கும் திருமணம் செய்து கொடுக்காதே! ஆதியிலிருந்தே இவள் பரமாத்மாவுக்கே பத்தினியாக இருக்கிறாள்’’ என்று கூறிவிட்டு நாரதர் மறைந்தார்.அன்று முதலே ஜனகர், எந்த மாதிரியான திட்டம் வகுத்தால் சீதையை, ஸ்ரீராமனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது ஒரு சமயம் திரிபுரத்தை எரித்த மஹாதேவன்,  கொடுத்த ஒரு அற்புதமான வில் அவருடைய பாட்டனார் வீட்டில் இருக்கிறது. அதைக்கொண்டு வந்து இங்கு வைத்து, அந்த வில்லை யார் நாணேற்றி முறிக்கின்றனரோ அவருக்கே சீதையைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்றமுடிவையே, அந்த முடிவாக வைத்துக் கொண்டார். அதன்படியே பறைசாற்றினார். பல மன்னர்கள் அதைத் தூக்கக்கூட முடியாமல் தோற்றுப் போனார்கள்.இப்போது ஸ்ரீராமன் அந்த வில்லை நாணேற்றி முறிக்க வந்துள்ளான். சிறந்த உடற்கட்டுள்ள ஐந்தாயிரம் வீரர்கள் அந்த வில்லைத் தூக்கிக்கொண்டு வந்து கொலுமண்டபத்தில் வைத்தனர். ஸ்ரீராமன் விளையாட்டுப் பிள்ளைபோல இடது கரத்தால் வில்லைத் தூக்கி நிறுத்தி நாண் கயிற்றைப் பூட்டினார். வலது கரத்தால் அதைச் சற்றே இழுத்தார். எல்லாத் திக்குகளிலும் பேரொலி எழுப்பிய வண்ணம் அந்த வில் சட்டென்று முறிந்தது. தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தோத்திரங்களால் துதி செய்தனர். அப்ஸரப் பெண்கள் நடனமாடினார்கள்.அப்போது பொன்வண்ண மேனியாள் சீதை, வலது கையில் சுவர்ணமாலை ஏந்தி, முத்துமாலை காதோலை முதலிய அணி கலன்களை அணிந்து, கால்களில் நூபுரம் ஒலிக்க, பட்டாடை உடுத்தி, புன்சிரிப்பு தவழ வந்து ராமனுடைய கழுத்தில் மலர் மாலையைப் போட்டுவிட்டு, மகிழ்ச்சியும், நாணமும் நிறைந்த முகத்தோடு திரும்பிச் சென்றாள்.இந்த அற்புதமான சீதாராமனின் சுயம் வரம் நடந்த இடம், நேபாள நாட்டில் உள்ள ஜனக்பூர் என்ற இடத்தில் பெரிய அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில்தான் சீதாதேவி வளர்ந்துவந்ததாகவும், இந்த அரண்மனைக்குள் சீதா-ராம திருக்கல்யாண மண்டபம் அமையப் பெற்றது. அந்த விவாக மண்டபத்தில்தான் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.சீதாதேவி மந்திர் என்று சொல்லக்கூடிய இந்த அரண்மனை நேபாளம், ராஜஸ்தான் மற்றும் மொகலாய கட்டடக் கலைஞர்களின் கலைகள் மூன்றும் இணைந்ததாக ஒரு அற்புதப் பாணியில் அமைந்துள்ளது. பார்வைக்குப் பிரமாண்டமாகவும், கண்களைக் கவரும் வகையிலும், கம்பீர வனப்புடனுடனும் ஜனக்பூர் ஜானகி மந்திர் திகழ்கிறது.விசாலமான மண்டபமும், அதை அடுத்து கருவறையின் நடுவிலே உயரமான வெள்ளி மண்டபத்துக்குள் ஸ்ரீராமபிரான், சீதாதேவி, லட்சுமணன், பரத சத்ருக்கனன், ஆஞ்சநேயர் உட்பட அனைவரும் எழுந்தருளியிருக்கும் காட்சியுடன், இது அரண்மனை மட்டுமல்ல, ஒரு  ஸ்ரீராம ஆலயம் என்பது போலவும் அமைந்துள்ளது. இந்த வெள்ளி மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் மகாவிஷ்ணு, வேணுகோபால சுவாமி போன்றவர்களுக்கும், ஹனுமனுக்கும் ஆலயம் அமைந்துள்ளது. இந்த சீதாராம விவாக மண்டபம் ஜபல்பூர் சமஸ்தான மன்னர்களால் உருவாக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் சீதா-ராம திருமணக் காட்சி, முனிவர்கள், மன்னர்கள் புடைசூழ காட்சியளிக்கின்றனர்.ஸ்ரீராமருடன் சீதாதேவி அயோத்திக்கு புறப்பட்டுச் சென்ற பொழுது, முனிவர் ஒருவரும் உடன் சென்று திரும்பி வந்தார். அப்போது வழியில் ஒரு குண்டத்திலிருந்து சீதாதேவியின் உருவமுள்ள பொன்விக்ரகத்தைக் கண்டெடுத்தார்.  அதைக் கொண்டு வந்து, மிதிலை நகரின் மக்களுடன் சேர்ந்து, அந்த விக்ரகத்தை இந்த அரண்மனையில் பிரதிஷ்டை செய்தார். தேவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்த அயோத்தி மக்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகவும் அமைந்தது.நாளடையில் இந்த விக்ரகத்திற்குப் பெண்கள் அவர்களுக்கு விவாகம் நடக்க வேண்டியும், பிள்ளை வரம் வேண்டியும் இந்த சீதாதேவியை வந்து பிரார்த்தனை செய்கின்றனர். இந்த ஸ்ரீ ஜானகி மந்திரில் விவாக பஞ்சமி எனப்படும் ஸ்ரீசீதாராமர்கல்யாண நாளான மார்கழி மாதம், சுக்ல பட்ச பஞ்சமியில் நடைபெறும். இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீராமநவமி, சீதா ஜெயந்தி போன்ற நாட்களில் இங்கு விசேஷ திருவாராதனை நடைபெறும். கார்த்திகை மாதம். சூரியனை வழிபட்டு, நான்கு நாட்கள் சிறப்பாக விசேஷ நாட்களாக ‘சாத்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இந்த அரமண்னையின் இருமருங்கிலும் ‘தனுஷ் சாகர்’ ‘கங்காசாகர்’ என்ற புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. ஸ்ரீராமன் வில்லை ஒடித்து அது சிதறி விழுந்த இடமே தனுஷ் சாகர் என்று அழைக்கப்படுகிறது.இங்கு இன்னொரு பகுதியில் ‘துலாஹாதுலஹி’ என்றஆலயத்தில் ஸ்ரீராமரும் – சீதாதேவியும் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றனர். இது தவிர அனுமனுக்கு ஒரு ஆலயமும் உள்ளது. இந்த அரண்மனைக் கோயில் ஜைன, புத்த மதத்தினராலும் புனிதமான இடமாகப் போற்றப்படுகிறது.வைகாசி மாதம்,  வளர்பிறை நவமி நாளன்று சீதா தேவியானவள். ஜனகரின் கலப்பை மோதிய பெட்டியில் கிடைத்த நாள் என்பதால் அன்றைய தினமே சீதாதேவியின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையே சீதாதேவி பிறந்த நாளாகக் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்த ஆலயம் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 135 கி.மீ. தொலைவில் ஜனக்பூர் என்று உள்ளது. பஸ்வசதி, தனியார் கார்வசதி உள்ளது. ராமசுப்பு…

You may also like

Leave a Comment

fourteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi