சிவநெறியை சிந்தையில் தேக்கிய மங்கைகள்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததேஇங்கே கடைசி  வார்த்தை,‘‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” என்பது முக்கியமானது.உமை அம்மையாருக்கு, மாதொரு பாகனாய், தன் இடப்பாகத்தை கொடுத்ததால், சிவபெருமானுக்குப் பெருமை.அப்பெருமை சிவனடியார் வரை சீர்மையுடன் உள்ளது. அவர்கள் சைவநெறிக்கு வலு சேர்த்தவர்கள்.அப்படி சிவநெறியை சிந்தையில் தேக்கிய  நற்குல மங்கைகள் சிலரின் பெருமைகளைக் காண்போம்.1. சைவ நெறி தழைக்க உதவிய தெய்வப்பெண் மங்கையர்க்கரசிமங்கையர்க் கரசி வளவர்கோன் பாவைவரிவளைக் கைம்மட மானிபங்கயச் செல்வி பாண்டிமா தேவிபணிசெய்து நாடொறும் பரவப்பொங்கழ லுருவன் பூதநா யகனால்வேதமும் பொருள்களும் அருளிஅங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்தஆலவா யாவதும் இதுவே  – என்ற தேவாரப் பாடலை கேட்காதவர்கள் யார்?திருஞான சம்பந்தர் மாதர்குலத் திலகமான மங்கையர்க்கரசியின் பெயரை வைத்தே தனது ஆலவாய் பதிகத்தைத்   தொடங்குகிறார்.இந்தப் பெருமை வேறு யாருக்கும் கிட்டாத பெருமை.இந்த தேவாரத்தில் கடை வரி தவிர மீதி வரியெல்லாம் பாண்டிமாதேவியின் சிவபக்தி குறித்துதான்.இதில் போற்றப்படும் மங்கையர்க்கரசியார், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.சோழநாட்டு இளவரசி மங்கையர்க்கரசியார். மதுரை  பாண்டியனை (நின்ற சீர் நெடுமாறன்) மணந்தாள். அப்பொழுது பாண்டிய நாடு சமணம் தழுவி இருந்தது. அரசனும் சமணத்தைப் பின்பற்றி இருந்தான். சைவத்தை தனது தவ நெறியாகப் பின்பற்றிய மங்கையர்க்கரசி, பாண்டி நாட்டில், மீனாட்சி அம்மன் திருக்கோயில் இருக்கக்கூடிய கூடல் நகரில், சைவநெறி தழைக்க வேண்டும் என்று விரும்பினாள். குலச்சிறையார் என்கின்ற சைவப்பெரியாரை துணைகொண்டு திருஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தாள். அப்பொழுது இறை அருளால் பாண்டிய மன்னனுக்குக் கொடுமையான சூலைநோய் வந்தது. அந்த நோயைச் சமணர்களால் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது திருஞானசம்பந்தர் மந்திர மாவது நீறுவானவர் மேலது நீறுசுந்தர மாவது நீறுதுதிக்கப் படுவது நீறுதந்திர மாவது நீறுசமயத்தி லுள்ளது நீறுசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. – என்ற திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனின் நோயைத் தீர்த்தார். அதனால் மகிழ்ந்த மன்னன் சம்பந்தரின் அறிவுரை கேட்டு, சைவத்துக்கு மாறினான். அதற்கு உதவியவர் மங்கையர்க்கரசி. தனது விடாமுயற்சி யினாலும் வேண்டுதலாலும், பொறுமையாலும்,  தெய்வக் குழந்தையும்  ஞானக்குழந்தையுமான திருஞானசம்பந்தரின்  பேரருளாலும் மெல்ல மெல்ல மதுரையை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினாள். இப்போது உள்ள சம்பந்தர் திருமடம் அப்போது ஏற்பட்டது தான். இதற்குக்  காரணம் மங்கையர்க்கரசி.2. நாவுக்கரசரை நாட்டிற்களித்த தெய்வ மங்கை திலகவதியார்தேவார மூவரில் ஒருவர் அப்பர்.  அப்பருக்கு “திருநாவுக்கரசர்” என்று திருநாமம். திருநாவுக் கரசரை உலகுக்குத் தந்தவர் திலகவதியார். அதற்காக அவர் செய்த தியாகங்கள் கண்ணீரை வரவழைக்கும். திலகவதியார் திருவாமூர் என்ற தலத்தில் வசித்த வேளாளர் குடும்பத்தில் புகழனார்-மாதினியார் தம்பதி மகள். இவரையடுத்து பிறந்த மகனுக்கு மருள்நீக்கி என்று பெயரிட்டனர். அக்காவுக்கும், தம்பிக்கும் வயது வித்தியாசம் அதிகம்திலகவதியார் தந்தையை இழந்தார். தாயை இழந்தார்.திருமணம் பேசி முடித்த எதிர்கால கணவரையும் (கலிப்பகையார்) போரில் பறிகொடுத்தார். ஆயினும் மறுமணம் செய்யாது, கணவனை இழந்த பெண்கள், எப்படி இந்த பூமியில் கைம்மை நோன்பு பூண்டு வாழ்வார்களோ, அப்படி, தன்னுடைய தம்பியான மருள்நீக்கியாருக்காக வாழ்ந்தார். தான் நேசித்த தன் தம்பி, வழிவழியாக வந்த குலநெறியாகிய, சைவநெறியிலிருந்து வழுவி,திசைமாறி, சமணநெறி தழுவிய போதும், பொறுமையாகக்  காத்திருந்தார். தளராத முயற்சி செய்து, இறையருளால், சமணத்தில் இருந்த தன் தம்பியை சைவ நெறிக்கு மாற்றி பணிகொண்டார். அப்படிப்பட்ட திருநாவுக் கரசரை சைவக்கொடையாகக் கொடுத்த மங்கையர் திலகம் திலகவதியார்.3. அந்த மாம்பழம் எங்கே?மூன்று பெண் நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார்  மூத்தவர். இயற்பெயர் புனிதவதியார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான்  “அம்மையே” என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்தார். கணவன் உணவருந்தும்போது  இரண்டு மாம்பழம் அல்லவா கொடுத்தேன், ஒன்று இருக்கிறது, இன்னொரு மாம்பழம் எங்கே என்று சிவனடியாருக்கு அமுது படைத்த அந்த மாம்பழத்தினைக் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்றார். அதன் சுவை வேறுபட்டிருந்தது. உண்மை அறிந்த கணவன் இவர் சிவபக்தியின் சக்தி அறிந்தான்.இனிமேல் தெய்வப் பெண்ணான அம்மையாருடன் குடும்பம் நடத்த முடியாது என்று அஞ்சிய பரமதத்தர் கடல் கடந்து வாணிபம் செய்ய கப்பலேறி செல்கிறான். பின் மதுரையில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்குப் புனிதவதி என்று பெயரிடுகிறான். கணவர் மதுரையில் இருப்பதை அறிந்த அம்மையார், அவ்வூருக்குச் செல்கிறார். அம்மையார் வருவதை அறிந்த கணவர், தம் மனைவி, குழந்தையுடன் வந்து அவர் காலில் விழுகிறார். கணவனே காலில் விழுந்து வணங்கிய பிறகு இல்லற வாழ்வில் இனி ஈடுபடுதல் கூடாது என்ற எண்ணத்தில் சிவனிடம் வேண்டி தம் அழகுத் திருமேனியை உதிர்த்து பேயுருவம் கொண்டு கைலாயம் செல்கிறார். சிவபெருமான் திருவாலங் காட்டில் அம்மையாருக்கு முக்தியளிக்கிறார்.இதற்கெல்லாம் காரணம் இறைவன் அளித்த தெய்வ மாங்கனி அல்லவா!இந்த சம்பவத்தை ஒட்டி இன்றும் காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித்திருவிழா நடைபெறுகிறது.ஆனிமாதம் பவுர்ணமியை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இறைவன் பிச்சாடனார் வேடமிட்டு ஊர்வலம் போகும்போது தெருவில் கூடியிருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கான மாம்பழங்களை கூடை கூடையாகக் கொட்டி இறைவனுக்கு காணிக்கையாக்குவது விழாவின் சிறப்பம்சமாகும்.காரைக்கால் நகருக்கு வந்து பக்தர்கள் இறைவன் மீது இறைக்கும் மாங்கனியை பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள். புத்திரபாக்கியம் வேண்டி இந்த மாங்கனியை சாப்பிடுபவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவர் இசைத்தமிழால் இறைவனைப்பற்றி முதன்முதலாகப் பாடியவர்.தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவர். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.காரைக்கால் சிவன் கோவிலில் இவருக்கென தனி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயில் “அம்மையார் கோயில்” என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.இவர் இயற்றிய அற்புதத்திருவந்தாதியில் ஒரு பாடல்:உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்கரைவினால் காரைக்கால் பேய்சொற் – பருவுவார்ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்(று) ஏத்துவார்பேராத காதல் பிறந்து.4. ஞானக்குழந்தையைப் பெற்றெடுத்த தெய்வ நங்கைசலம்பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்உலடலுள்ளூறு சூலை தவிர்த்தருளாய்அலந்தேன்அடி யேன் அதிகைக்கெடிலவீராட்டனத்துறை அம்மானே”இது ஞானசம்பந்தரால் “அப்பர்” என அழைக்கப்பட்ட நாவுக்கரசரின் பாடல். இதில் “தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்ற வரி முக்கியம்.தாய்ப்பால் பருகி வளர்ந்த குழந்தைகள் உண்டு.ஆனால் மூன்றுவயதில் லோகமாதாவாகிய அன்னை பராசக்தியின் ஞானப்பால் பருகி இறைவன் தந்த பொற்றாளம் கொண்டு தேவாரம் பாடியவர் ஞானசம்பந்தர்.இந்த வரலாற்றை நினைவுகூரும் விதமாக திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா ஆண்டுதோறும் சித்திரைமாதம் திருமுலைப்பால் விழாவாக சீர்காழியில் கொண்டாடப்படுகிறது.இந்த ஞானக்குழந்தையைப் பெற்றெடுத்த தெய்வநங்கை தான் இசைஞானியார்.இசைஞானியார் என்பவர் சைவசமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். எல்லையற்ற சிவபிரான் பேரருளால் சைவநெறி நின்று வாழ்ந்த இசைஞானியார் – சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்ற மைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார். 5. “எல்லாம் சிவமயம்” என வாழ்ந்த  திருவெண்காட்டு நங்கைஇவர் இயற்பெயர் தெரியவில்லை. சோழவள நாட்டில் திருவெண்காடு என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் பிறந்ததால் இவருக்கு இப்பெயர் வாய்த்ததா அல்லது இவருடைய பெயரே இதுதானா என்று தெரியவில்லை.ஆனால் சிவநெறியே தவநெறி.அதுவே  உயர்நெறி என்று திகழ்ந்த மாதர்குல மாணிக்கம். அறுபத்தி மூன்று நாயன் மார்களில் ஒருவரான சிறுத்தொண்டரின் மனைவி. சிவனடியார்களுக்கு அமுது படைக்கும் தொண்டே பெரும்பேறு என்று உறுதி கொண்டவர். சிறுத்தொண்டர் ஒரு காலத்தில் பரஞ்ஜோதியாக  பல்லவனின் படைத் தளபதியாக விளங்கியவர். வாதாபிப் போரில் பெருவெற்றி கண்டவர். அதனால் மன்னனின் மதிப்புக்கு உரியவர்.பின் கொலைத்தொழிலாம்போர்த் தொழிலை வெறுத்து, திருவெண்காட்டு நங்கையை மணந்து சிவநெறிச் செல்வராக விளங்கினார். அவர்களுக்கு ஒரே பிள்ளை சீராளன். ஒரு காலத்தில் கொலைத்தொழில்புரிந்த வீரரான  சிறுத்தொண்டர் மற்றும் திருவெண்காட்டு நங்கையின் மன உறுதியை மிகத் தீவிரமாக சோதிக்க எண்ணிய சிவபெருமான், அவர்களிடம் வந்து பிள்ளைக்கறி சமைத்துத்  தருமாறு கேட்க, திருவெண்காட்டு நங்கையார்,எல்லாம் சிவமயம் என்ற ஞான உணர்வில், மன உறுதியோடு தம் பிள்ளையை தியாகம் செய்யத் தயாரானார். அப்பூதிஅடிகளின் மனைவிகூட இறந்து போன மகனை மறைத்து வைத்துவிட்டு அடியாரை உபசரித்தாள். ஆனால் திருவெண்காட்டு   நங்கையோ, உயிரோடு இருந்த மகனையே அரிந்து அமுதாக்கி அடியவரை உபசரித்தார்பொதுவாக சிறுத்தொண்டர் புராணம் நாடகமாக நடத்தப்படுகிறது. ‘‘தலைக்கறி எங்கே? எங்கே?” என்று சிவனார் பாடும் பாடல் விசேஷமானது.பிள்ளைக்கறி கேட்ட கதையை நாம் அறிவோம். ஆனால் அதன் சூட்சுமக் கருத்து வேறு. படைக்கப்பட்ட எல்லாம் சிவனுக்கு உரியது என்பதை உலகுக்கு அறிவிப்பதே இக்கதையின் உட்கருத்து. `இந்த வரலாறு இன்றும் பல திருத்தலங்களில் சிறு தொண்டர் அமுது படையல் என்கின்ற நிகழ்வாக நடத்தப்படுகின்றது. அதற்கு முழுக் காரணமாக அமைந்த தியாகச் செல்வி தான் திருவெண்காட்டு நங்கை. ஞான நிலையின் எல்லையில் நின்ற இவர்களின் சிவபக்தியை புரிந்து கொள்வது கடினம். சிவபெருமான் அருளால் இவர்கள் பெரும்பேறு பெற்றனர். 6. ஓதுவா மூர்த்திகளின் வழிகாட்டி1400 ஆண்டுகளுக்கு முன்பே சைவ சமயத்தில் முதல்பெண் ஓதுவாமூர்த்தி மதங்க சூளாமணி. காரைக்காலுக்கு அருகே தருமபுரம் என்ற ஊரில் அவதரித்தவர் மதங்க சூளாமணியார். ‘மதங்கர்’ என்றால் இசைப் பாரம்பர்ய குலத்தின் பெயர். சூளாமணி என்றால் ஒளிமிக்க மணி போன்றவர் என்று பொருள். இரண்டும் இணைந்த பெயர்தான் மதங்க சூடாமணி.ஜெயங்கொண்டம் பக்கத்திலே ராஜேந்திர பட்டினம் என்று ஒரு ஊர். அது பழங்காலத்தில் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப்பட்டது. அங்கே அவதரித்த நீலகண்டயாழ்ப்பாணரை மணந்தார். சகோட யாழினை ஈசனே உருகும் வண்ணம் வாசிக்கும் திறன் கொண்டவர் நீலகண்ட யாழ்ப்பாணர். அவருக்கு இணையாக தாளமிட்டு ஈசனின் திருப்பாடல்களை கல்லும் கனிந்துருகப்பாடும் அருள் கொண்டவர் இந்த அம்மையார். சிவநெறியைப் பாடிப்பரப்பும் பணியை மேற்கொண்டு சிவத்தலங்களைச் சேவித்தார். யாழிசையால் ஈசனைப் யாழ்ப்பாணர் பணிய, மதங்க சூளாமணியார் பாடல் புனைந்து பாடுவார். இவர்களின்  இசை ஆற்றலுக்கு  மயங்காதவர்களே கிடையாது எனலாம்.பாணர் குலத்தில் பிறந்ததால், மதுரை ஆலவாயன் சன்னதிதில் ஒதுங்கியிருந்து இவர்கள் பாட, இவர்களின் பண்ணிசையில் மயங்கிய ஈசன், உள்ளே அழைத்து தனி ஆசனமிட்டு பாட வைத்தான்.அந்தணர்களின் வேள்விச்சாலையில் தங்கும் பெருமையும் இவர்களுக்கு இருந்தது.தேவார இசையின் உன்னதத்தை முதலில் உலகுக்குக் காட்டிய இன்னிசை மங்கைதான் மதங்க சூடாமணி.-முனைவர் ராம்…

Related posts

குறை தீர்க்கும் பெருமாள்கள்

நவராத்திரி வழிபாடு முறைகள்.. அம்மனுக்கு நவ வித அலங்காரங்கள்!!

மங்கலத் தாயே நீ வருவாயே!