சிவகாசியில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து தரைமட்டமான கட்டடம்!: இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் கதி என்ன?

விருதுநகர்: சிவகாசி மேற்கு நேருஜி பகுதியில் அனுமதியில்லாத கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. சிவகாசி மேற்கு நேருஜி பகுதியில் பஞ்சவர்ணம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இதன் கீழ் தளத்தில் பட்டாசு குழாய் தயாரிப்பு நிறுவனமும், மேல் தளத்தில் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டிடத்தின் அனுமதியில்லாத பகுதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை இருப்பு வைத்து அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தீபாவளி விற்பனை முடிந்த பின்னர், மீதமுள்ள பட்டாசுகள் பண்டல் பண்டலாக இருப்பு வைக்கப்பட்டதாகவும், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை அனுமதி இல்லாத கட்டிடத்தில் கள்ளத்தனமாக இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டுவெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசுகள் வெடித்ததில் மளமளவென பரவிய தீ கட்டிடம் முழுவதும் பரவி சற்று நேரத்தில் கட்டிடமானது முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. வெடிவிபத்து நேர்ந்த போது பணியில் இருந்த 5 தொழிலாளர்களின் நிலை என்ன? என்பது தற்போது கேள்வியாக உள்ளது. தொடர்ந்து வெடிவிபத்து நிகழ்ந்த வீட்டின் இடிபாடுகளை பொக்லைன் மூலம் அகற்றி 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெடிவிபத்தில் இடிந்த கட்டிடத்தில் இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கியிருக்கலாமோ என்ற ஐயமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடி விபத்து நிகழ்வின் போது வேல்முருகன், மனோஜ் குமார் ஆகிய 2 தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இடிந்த கட்டடத்தில் பட்டாசுகள் தொடர்ந்து வெடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இடிபாடுகளை அகற்றிய பின்னரே உயிரிழப்பு குறித்து முழு விவரம் தெரியவரும்.  …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்