சிவகங்கை மாவட்டத்தில் விவசாய குழுக்கள் கட்டணமின்றி தரச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, மே 30: இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து பங்கேற்பாளர் உறுதி அளிப்பு திட்டத்தில் கட்டணம் செலுத்தாமல் தரச்சான்று பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குழுக்கள் கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தில் அங்ககச்சான்று பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து பங்கேற்பாளர் உறுதி அளிப்பு திட்டத்தில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தரச்சான்று பெறலாம். தரச்சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டு சந்தையில் மட்டும் விற்பனை செய்யலாம்.

குறைந்தபட்சம் 10 விவசாயிகள் முதல் 50 விவசாயிகள் வரை இணைந்து குழு அமைத்து அங்கக முறைப்படி பயிரிடுவோம் என உறுதிமொழி எடுத்து பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய விவசாயிகள் புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடள் உறுதிமொழி படிவம் பண்ணை விபரங்கள், ஆதார் நகர், சிட்டா ஆகிய ஆவணங்களை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும். உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். உறுப்பினர்கள் குழுவில் உள்ள மற்ற விவசாயிகளின் வயலை ஆய்வு செய்ய வேண்டும்.

மூன்றாம் நபர் ஆய்வு இல்லை. உற்பத்தி செய்யப்படும் விளைபொருள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா என உறுதிப்படுத்த உபயோகிப்பாளர் ஒருவரை ஆய்விற்கு அழைத்து செல்லலாம். ஆய்வு முடிவுகள் குழுவின் ஒப்புதலுக்கு வைக்கப்படும். உள்ளூர் குழுவின் முடிவு திருப்திகரமாக இருந்தால் சான்று வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயி இத்திட்டத்தில் சான்று பெற இயலாது. குழு மட்டுமே பதிவு செய்ய இயலும். அனுமதிக்காத இடுபொருள் பயன்படுத்தினால் நீக்கப்படுவர். கூடுதல் தகவல் பெற சிவகங்கை, தொண்டி சாலையில் உள்ள விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்