சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் ஆலைகளால் நிலத்தடி நீர் பாதிப்பு

சிவகங்கை, மார்ச் 7: சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் குடிநீர் ஆலைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வீட்டு போர்வெல்களில் நீர் அதிகப்படியான ஆழத்திற்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் வறட்சி பாதிப்பு, காலம் தவறிய பருவ மழை உள்ளிட்டவற்றால் குளங்களில் பெரும்பாலும் நீர் இருப்பதில்லை.

சில குளங்களில் மட்டுமே நீர் தேங்கி குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தேங்கும் நீரும் விரைவாக வற்றி விடுகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தனியார் குடிநீர் ஆலைகள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் உள்ளன. காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாதுரை, காளையார்கோவில் பகுதிகளில் தனியார் குடிநீர் ஆலைகள் அதிகப்படியாக தொடங்கப்பட்டு வருகின்றன. முன்பு குடியிருப்பு பகுதிகள் இல்லாத வயல்வெளி பகுதிகளில் தொடங்கப்பட்டு வந்த குடிநீர் ஆலைகள் தற்போது குடியிருப்பு பகுதி அருகிலேயே தொடங்கப்படுகின்றன.

இந்த ஆலைகளில் ராட்சத போர்வெல் மூலம் நீர் எடுக்கப்பட்டு பாட்டில்கள், கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வேன், லாரிகளில் நீர் எடுத்துச் சென்று கிராமங்களில் ஒரு குடம் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீடுகள் மற்றும் அரசு சார்பில் போடப்படும் போர்வெல்கள் சிறிய அளவிலானவையாகும். சிறிய குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றும் அளவிற்கு மட்டுமே இந்த போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் தனியார் ஆலைகளில் ராட்சத போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. இந்த ராட்சத போர்களால் ஆலை அருகிலுள்ள கிணறுகள், வீடுகளில் உள்ள போர்வெல்கள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டுள்ள போர்வெல்களில் நில்லதடி நீர்மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. மேலும் வயல் பகுதிகளில் உள்ள ஆலைகளால் வயல் கிணறுகளில் நீர்மட்டம் ஆழத்திற்கு செல்வதால் நீர் பாய்ச்ச முடியாத நிலையில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி தான் கிராமங்களில் இருக்கும் ஓரே குடிநீர் ஆதாரம். ஆனால் அவைகளையும் சிதைக்கும் வண்ணம் அதன் அருகிலேயே தனியார் போர்வெல்கள் போடப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் குடிநீர் ஆலைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அனுமதியின்றி செயல்படும் ஆலைகளை மூட வேண்டும். புதிய ஆலைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது. குடிநீர் ஆலைகளுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை