சிவகங்கை மாவட்டத்தில் கதிரறுக்கும் இயந்திரங்கள் தட்டுப்பாடு-வேளாண்துறை ஏற்பாடு செய்ய கோரிக்கை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நெல் கதிரறுக்கும் இயந்திரங்களை வேளாண் துறை சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 82 ஆயிரம் எக்டேர் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. விதைப்பு மற்றும் நாற்று நடவுப்பணிகள் கடந்த அக்டோபரில் தொடங்கியது. மாவட்டத்தின் சில பகுதிகளில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அறுவடைப்பணி தொடங்க உள்ளது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் முழு வீச்சில் நெல் அறுவடை செய்யப்பட உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்வரை விவசாயத்திற்கான அனைத்து பணிகளையும் ஆட்களே செய்து வந்தனர். பின்னர் ஆட்கள் தட்டுப்பாடு, கூடுதல் செலவினத்தால் இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. தற்போது களையெடுத்தல், நாற்று நடுதல் அல்லது விதைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே ஆட்கள் செய்கின்றனர். நிலம் சமப்படுத்தல், உழுவது, கதிரறுத்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து இடங்களிலுமே இயந்திரங்களை பயன்படுத்தியே கதிரறுக்கும் பணி நடக்க உள்ளது. கதிரறுக்கும் இயந்திரங்கள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு பயன்படுத்தப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனியார் சிலர் மாத வாடகை அடிப்படையில் கதிரறுக்கும் இயந்திரத்தை எடுத்து வருகின்றனர். அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் மட்டுமே கதிரறுக்கும் பணி இருக்கும் என்பதால் இவ்வாறு மொத்த வாடகைக்கு எடுத்து வருகின்றனர். இவ்வாறு கொண்டு வரப்படும் இயந்திரங்களுக்கு கதிரறுக்கும் பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1300 வாடகையாக வசூலிக்கப்படும். ஆனால் இயந்திரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டதால் கடந்த ஆண்டுகளில் ரூ.2000 வரை வாடகை வசூல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். விவசாயிகள் கூறுகையில், ஆட்கள் மூலம் கதிரறுப்பு செய்தால் முதலில் கதிரறுத்தல், பின்னர் கதிரிலிருந்து நெல்லை பிரித்து எடுப்பதற்கு அடிப்பது, அதன் பின்னரும் கதிரில் இருக்கும் நெல்லை எடுக்க மாடுகள் மூலம் புனையல் அடிப்பது என தொடர் பணிகள் செய்ய வேண்டும். இதற்காக ஆட்களுக்கு வழங்கப்படும் கூலியே கூடுதலான செலவினமாகும். இருப்பினும் தற்போது ஆட்களும் கிடைப்பதில்லை. இதனால் வேறு வழியே இல்லாமல் இயந்திரங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயம் ஒரே நிலையில் இருப்பதில்லை. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமே இயந்திரங்கள் வர வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டுகளில் இயந்திர பற்றாக்குறையால் குறிப்பிட்ட பருவத்தில் நெல் அறுக்காமல் அவை வீணாகிவிடும் நிலை ஏற்பட்டது. எனவே கதிரறுக்கும் இயந்திரங்களை வேளாண்துறை சார்பில் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !