சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்: இனி வரும் காலங்களில் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை: சேகர் ரெட்டி அறிக்கை

சென்னை: அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதால் இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தொழில் அதிபர் ஜெ.சேகர் (எ) சேகர் ரெட்டி நேற்று வெளியிட்ட அறிக்கை: இன்று தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழகத்தில் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில நாட்களாக என்னை பற்றி சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் எனக்கும் மற்ற சிலருக்கும் தமிழக அரசின் பொதுப்பணி துறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்ததாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. எனது பெயரிலோ, என் நிறுவனத்தின் பெயரிலோ கடந்த 15 வருடத்தில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை இதுவரை எந்த ஒரு ஒப்பந்தமும் நாங்கள் பெற்றதில்லை. வேண்டுமென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுப்பணி துறையில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழக அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி வந்தவர்களிடம் மணல் வாங்கி நாங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தோம். இதை தவிர நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை.இனி வரும் காலங்களிலும் நானும் எனது நிறுவனமும் தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே, இதுபோன்ற செயல்களில் எனது பெயரை பயன்படுத்தி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தொழில் அதிபர் ஜெ.சேகர் (எ) சேகர் ரெட்டி கூறியுள்ளார்.                      …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு