சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு ஆரணி அருகே கடத்திச்சென்று

திருவண்ணாமலை, ஜூலை 5: ஆரணியில் 17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் ஆரணிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் முருகன்(31). ஆரணி அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமானவர். இந்நிலையில், மில்லில் வேலை செய்தபோது, அவருடன் வேலை செய்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றியுள்ளார். கடந்த 12.3.2019 அன்று வழக்கம்போல மில் வேலைக்கு வந்து கொண்டிருந்த சிறுமியை வழிமறித்து மிரட்டிய முருகன், அந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர், இதுதொடர்பாக ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், அப்போதைய ஆரணி டிஎஸ்பி செந்தில் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், கடத்தப்பட்ட சிறுமியை மீட்டனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை