சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

 

சிவகங்கை, ஆக.2: கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் லோன் மேளா நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டங்களில் சிறுபான்மையினர் பயன் பெற சிவகங்கையில் ஆக.7, மானாமதுரையில் ஆக.9, இளையான்குடியில் ஆக.11, திருப்புவனத்தில் ஆக.14, காளையார்கோவிலில் ஆக.16, திருப்பத்தூரில் ஆக.18, சிங்கம்புணரியில் ஆக.21, காரைக்குடியில் ஆக.24, தேவகோட்டையில் ஆக.28 ஆகிய தேதிகளில் லோன் மேளா நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் தேவையான கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம்(போக்கு வரத்து வாகன கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு