Thursday, September 19, 2024
Home » சிறுநீரகம் காப்போம்!

சிறுநீரகம் காப்போம்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் Take Careஉடற்செயல்பாட்டில் தவிர்க்க முடியாத ராஜ உறுப்புகள் நான்கு என்று மருத்துவ உலகம் வரையறுக்கிறது.; மூளை, கல்லீரல், இதயம் ஆகியவற்றுடன் நான்காவது ராஜ உறுப்பான சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரிப்பது, சிறுநீரை உற்பத்தி செய்வது என்று அதிமுக்கிய பணிகளை செய்கிறது.இத்தனை முக்கியத்துவம் கொண்ட சிறுநீரகம் கெட்டுப் போனால் உடலின் சகல இயக்கங்களும் பாதிப்படையும். எனவே, சிறுநீரகங்களை விழிப்புணர்வுடன் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் பல தவறுகள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. அவற்றை உணர்ந்து தவிர்த்தாலே போதும்.* நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வோர் உணவும் உங்கள் சிறுநீரகத்துடன் தொடர்புடையது. அதிகக் கொழுப்பு, அதிக உப்பு மற்றும் அதிக சர்க்கரை கலந்த உணவுகள் உங்கள் சிறுநீரகங்களுக்கு ஏற்றவையல்ல. இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்தும். இவை எல்லாமே சிறுநீரக ஆரோக்கியத்தோடு நேரடி தொடர்பு உள்ளவை.* சிறுநீரகங்களின் ஆரோக்கியத்துக்கு சரிவிகித உணவு மிகமிக முக்கியம். நிறைய காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானிய உணவுகள் சிறுநீரக ஆரோக்கியத்தைக் காப்பவை. பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விடவும்.* சாதாரண வலிகளுக்குக் கூட வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?அப்படி நீங்கள் எடுத்துக் கொள்ளும் வலி நிவாரண மாத்திரைகள் உங்கள் சிறுநீரகங்களை சிறுகச்சிறுக பாதிக்கும் என்பதை உணர்வீர்களா?!வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதும், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதும் ஆபத்தானது. அதே மாதிரி அல்சர் பிரச்னைக்காக எடுத்துக் கொள்ளும் Proton Pump Inhibitors (PPI) கூட சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்கு மட்டும்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.* காய்ச்சலும் ஜலதோஷமும் ஏற்பட்டால் நீங்களாகவே மருந்துக் கடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும் இந்த மருந்துகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடும். எனவே, ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம். நீங்களாகவே ஆன்ட்டிபயாட்டிக் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.* ஒரு முறை மருத்துவர் பரிந்துரைத்த ஆன்ட்டிபயாட்டிக்கை அடுத்த முறை உடல்நலமின்றிப் போகும்போது நீங்களாகவே பயன்படுத்தக் கூடாது. ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக்கொள்ளும்போது குறிப்பிட்ட நாட்களுக்கும், குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.* சத்துக் குறைபாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் சப்ளிமென்ட் மருந்துகள் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கக் கூடியவை. அதிலும் ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்கள் சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்ளும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக மூலிகை கலந்த சப்ளிமென்டுகள் அவர்களுடைய சிறுநீரக பாதிப்புகளை மேலும் தீவிரம் அடையச் செய்யலாம்.* சிறுநீரக பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படுபவர்களுக்கு முதலில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லியோ, தவிர்க்கச் சொல்லியோ அறிவுறுத்தப்படும். அதிக உப்பானது சிறுநீரில் புரதத்தின் அளவை அதிகரிக்கும். இது நேரடியாக சிறுநீரகத்தைத் தாக்கும். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு அது இன்னும் தீவிரமாகும்.* பலவித நோய்களுக்கும் தண்ணீரே முதலும் முழுமையான மருந்தாக அமைகிறது. போதுமான அளவு தண்ணீர் அருந்தும்போது தேவையில்லாத கழிவுகள் சிறுநீரின் வழியே வெளியேற்றப்படுகின்றன. தேவையான அளவு தண்ணீர் அருந்தாத போது, சிறுநீரகங்களின் உள்ளே இருக்கும் நுண்ணிய வடிகட்டிகள் சரியாகச் செயல்படாமல் போவதோடு, சிறுநீரகக் கற்களுக்கும் சிறுநீரகத் தொற்றும் முகாந்திரம் அமைத்துத் தரலாம்.* தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் அளிக்கும்.சிறுநீரகங்களையும் காக்கும்.* உடற்பயிற்சிகளுக்கும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா?ஆனால், அதுதான் உண்மை. உடற்பயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரை நோய் மற்றும் இதயநோய் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. இவை இரண்டுமே சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடிய நோய்கள்.* உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும் அது அளவோடு இருக்க வேண்டியதும் முக்கியம். அளவுக்கதிக உடற்பயிற்சியும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. தினமும் 30 நிமிடங்கள் என்கிற கணக்கில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. வேகமாகவும், தீவிரமாகவும் உடற்பயிற்சி செய்யாமல், மெதுவாக அதிகரிக்கலாம்.* உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டி யதும் அவசியம். குறிப்பாக உங்கள் உறவினர்களில் யாருக்கேனும் இதயநோய்களோ, உயர் ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ, சிறுநீரக பாதிப்போ இருந்தால் நீங்கள் அவசியம் வருடம் ஒருமுறையாவது சிறுநீரகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முறையான பரிசோதனை பல பெரிய பிரச்னைகளில் இருந்து உங்களை காக்கும்.* மது அருந்துவதால் உங்கள் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும். அது உங்கள் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.உடல் பருமன், கல்லீரல் செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பல பிரச்னைகளுக்கும் காரணமாவதுடன், உங்கள் சிறுநீரகங்களையும் பாதிக்கக்கூடியது மதுப்பழக்கம். எனவே, அதை விட்டு விலகி இருப்பதே பாதுகாப்பானது.* மதுப்பழக்கத்தை போன்றே மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது புகைப்பழக்கம். புகை பிடிப்பவர்களுக்கு சிறுநீரகப் புற்றுநோய் ஏற்படும் அளவுக்கு அபாயம் காத்திருக்கிறது. ரத்த நாளங்களை பாதித்து சிறுநீரகங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் பாதித்து சிறுநீரகச் செயலிழப்புக்கு வித்திடக் கூடியது புகைப்பழக்கம்.* புகைப்பழக்கம் இருப்பவர்கள் ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது, அந்த மருந்துகள் முறையாக வேலை செய்யாமல் போகலாம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்புக்கு மிக முக்கியமான காரணம் என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதே இந்த எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வு.* சிறுநீரகங்களை பாதிக்கும் மிக முக்கியமான இரண்டு பிரச்னைகள் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம். சமவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் ரத்த சர்க்கரையையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.* சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது ரத்தச் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகள் தேவைப்பட்டால் இன்சுலின் எடுத்துக்கொள்ளவும் தயங்கக் கூடாது.– ராஜி

You may also like

Leave a Comment

10 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi