சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது

ஏரல், ஆக. 23: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா, நேற்று காலை கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 2வது செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான கொடை விழா, வருகிற 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கோயில் முன்மண்டபத்தில் கால்நாட்டு விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

வரும் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, 28ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் மாக்காப்பு தரிசனம், இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான கோயில் கொடை விழா, 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தன காப்பு தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், நள்ளிரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், தொடர்ந்து கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோயில் மற்றும் நகர் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு காலை, மதியம், இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

29ம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணிக்கு வெளியே உலா சென்ற அம்மன் திருக்கோயில் வந்து அமர்தல், 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடக்கிறது. கொடை விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை