சிறப்பு படை நடவடிக்கையால் கலங்கி போயிருக்கும் இலை விஐபிக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கருப்பு ஆடுகள் சில சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருக்கிறதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தின் பட்டி பகுதியில் மட்டுமே அய்யம்பாளையம், சித்தரேவு, எம்.வாடிப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகள் அதிகமிருக்கிறது. இப்பகுதிகளில் இருக்கும் 20க்கும் அதிக ஓடைகளில் முன்பு இலைக்கட்சியினர் டோக்கன் வழங்கி, மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஆட்சி மாற்றத்தால் இந்த கொள்ளை தடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் இலைக்கட்சியினருடன் இணைந்து சில போலீசார் வருவாய் பார்த்து வந்தனர். தற்போதும் கை அரிப்பில் மணல் திருட்டுக்கு அதே சில போலீசார் ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேர ரோந்து பணி செல்லும் போலீசார், ஓடைகளில் மணல் அள்ளி வருபவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, மணல் அள்ளுவதை அனுமதித்து வருவது தொடர்கிறதாம். இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் டிராக்டர்களில் மணல் கடத்தல் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆட்சி மாற்றத்தால், மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்டி காவல் நிலையத்து போலீசார் ஆதரவோடு மணல் கொள்ளை அதிகரித்துள்ளதாம். உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து காவல்துறையில் உள்ள இந்த கருப்பாடுகளை களைந்திட வேண்டுமென ஆளும் தரப்பினருடன், பொதுமக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சி வெட்டுனாத்தான் காரியம் நடக்குதாமே..’’ ‘‘கோவை  தெற்கு தாலுகா ஆபீசில் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பம் குவிந்த வண்ணம்  உள்ளன. கொரோனா  ஊரடங்கு காரணமாக விண்ணப்பிக்காத பலர், தற்போது விண்ணப்பம்  செய்து வருகின்றனர். அத்துடன், சமீபத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.  இதிலும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்கள் அதிகளவில் வந்துள்ளன. ஆனால்,  இந்த விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை என்பது படுமந்தமாக உள்ளது. விண்ணப்பம்  அளித்தவர்கள் தினமும் தாசில்தார் ஆபீசுக்கு நடையாய் நடக்கின்றனர்.  ஆனாலும், வேலை நடப்பதில்லை. இதற்கிடையில், ஒருசிலர், கொடுக்க வேண்டியதை  கொடுத்து காரியம் சாதித்து விடுகின்றனர். இந்த வித்தை தெரியாமல் பலர்  அன்றாடம் அலைகின்றனர். நெட்டையோ, குட்டையோ… ஏதோ கொஞ்சம்  கொடுத்தால்தான் நாங்களும் சப்தம் இல்லாமல் வளைந்து, நெளிந்து போக வசதியாக  இருக்கும்… என இங்குள்ள ஊழியர்கள் வெளிப்படையாக லஞ்சம் கேட்கின்றனர்.  சம்திங் வராத காரணத்தால் பல நூறு விண்ணப்பங்களை கிடப்பில் போட்டுள்ளனர்.  நியாயமாக செய்யவேண்டிய பணிகளுக்குகூட காசு எதிர்பார்ப்பது பெரும்  அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்திலும் இதே  நிலைதான். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.  இங்கு, ஒரு பெண் துணை தாசில்தார் உள்ளார். அவர், பலே கில்லாடி. கரன்சி  நகர்த்தாமல் இவரிடம் எந்த வேலையும் ஆகாது. இதனால் மக்கள் புலம்புகின்றனர்’’  என்றார் விக்கியானந்தா. ‘‘எஸ்பி ஸ்பெஷல் டீம் நடவடிக்கையால் இலை கட்சி லோக்கல் விஐபிக்கள் கலக்கத்தில் உள்ளார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர  மாவட்டத்தில் புகழ்பெற்ற தர்கா அமைந்துள்ள பகுதியில் பள்ளி செல்லும்  மாணவர்கள், இடைநின்ற பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து சில சமூக  விரோதிகள் கஞ்சா விற்று வருவதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும்  புகார்கள் சென்ற வண்ணமாக இருந்தது.  காக்கிகள் ரகசிய விசாரணையில்…  சென்னையில் இருந்து ரயில் மூலம் கடலோர மாவட்டத்திற்கு கடத்தி வரப்படும்  கஞ்சாவை இங்குள்ள ஏஜண்டுகள் மூலம் விற்கப்படுவதும்… கஞ்சா விற்பனை நேரடி  தொடர்பில் லோக்கல் இலைகட்சியை சேர்ந்த விஐபிக்கள் இருப்பதும் தெரிய  வந்ததாம். இதனால் லோக்கல் காவல்நிலைய காக்கிகள் நமக்கு ஏன் வம்பு என  ஒதுங்கி விட்டார்களாம். பல ஆண்டு காலமாக நடக்கும் கஞ்சா விற்பனையால்  குழந்தைகள் எதிர்காலத்தை கருதி பெற்றோர்கள் மாவட்டத்தை விட்டு வேறு  மாவட்டத்திற்கு சென்று விட்டார்களாம். மாவட்டத்தை விட்டு அவர்கள்  சென்றாலும் மற்ற மாணவர்களின் எதிர்காலம் கருதி புதிதாக பொறுப்பேற்றுள்ள  மாவட்ட எஸ்பி வாட்ஸ்அப் எண்ணிற்கு குழந்தைகளின் நலன் கருதி கஞ்சா விற்பனையை  ஒழிக்க வேண்டும் என கோரிக்கையாக பதிவிட்டார்களாம்.. இதைதொடர்ந்து கஞ்சா  விற்பனையை ஒழிக்கவும்… லோக்கல் விஐபிக்கள் யாருக்கெல்லாம் தொடர்பு  இருக்கிறது… சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகள் யார் யார் என கண்டறிந்து அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பியிடம் இருந்து அதிகாரிகளுக்கு  ரகசிய உத்தரவு பறந்ததாம்… இதற்காக ஒரு ஸ்பெஷல் டீம் ஒன்று  உருவாக்கப்பட்டது. இந்த ஸ்பெஷல் டீமில் பழநி ஆண்டவரின் பெயர் கொண்ட எஸ்ஐ  தலைமையிலான காக்கிகள் அதிரடியாக களத்தில் இறங்கினர். இந்த தொடர் வேட்டையில்  200 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாம்.. இதனால் லோக்கல் இலைகட்சி  விஐபிக்கள் இவர்களுடைய ஏஜெண்டுகள் ஸ்பெஷல் டீம் காக்கிகளிடம் சிக்கி  விடுவோமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா