சிறந்த பணிக்காக ஒன்றிய அரசு வழங்கியது: உன்னிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு விருது

திருமங்கலம், ஏப். 11: மதுரை கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கே.உன்னிப்பட்டி. இந்த ஊராட்சியின் தலைவராக சாரதாதேவி செந்தில்குமார் இருந்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு ஏற்ற பின்பு கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். இதுதவிர கிராமத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் பொருட்டு உன்னிப்பட்டி முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவை குறைவின்றி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, முககவசம், கபசூர குடிநீர் வழங்குதல், தூய்மை பணி உள்ளிட்டவை சிறப்பாக செய்தமைக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதற்கும் தற்போது ஒன்றிய அரசு உன்னிப்பட்டி தலைவர் சாரதாதேவிக்கு விருது வழங்கியுள்ளது. டெல்லியில் ஒன்றிய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதினை சாரதாதேவிக்கு வழங்கினர். மாவட்டத்தில் சிறந்த ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட கே.உன்னிப்பட்டி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை