சிபிஐக்கு அதிக அதிகாரம் வழங்க புதிய சட்டம் கொண்டு வரலாமா?…கருத்து கேட்கிறது நாடாளுமன்ற குழு

புதுடெல்லி: அதிக அதிகாரம் வழங்க, தற்போதுள்ள சட்டத்தை திருத்தலாமா அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து சிபிஐ தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமென நாடாளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் நிர்வாக சட்டப்பிரிவு 6ன்படி, மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட மாநில அரசின் பொது ஒப்புதலை பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த பொது ஒப்புதலுக்கான அனுமதி வழங்குவது மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதற்கிடையே, சிபிஐ அமைப்பை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உட்பட ஏராளமான மாநில அரசுகள் பொது ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளன. இதன் காரணமாக, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கும் வழக்குகளை தவிர, பிற வழக்குகளின் விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதலை சிபிஐ கேட்க வேண்டி உள்ளது. இது தனது விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என சிபிஐ கருத்து தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், ஒன்றிய பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற குழு, சிபிஐ.யின் அதிகாரத்தை அதிகரிக்க தற்போதுள்ள சட்டங்களை திருத்த வேண்டுமா அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டுமா என ஆய்வு செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமென நாடாளுமன்ற குழு புதிய அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது.அதில், புதிய சட்டம் கொண்டு வருவது அல்லது சட்டத்தை திருத்துவது குறித்து சிபிஐ தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமென நாடாளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது. இதே போல், சிபிஐ.யில் காலியாக உள்ள 1,000 பணியிடங்களை எப்படி, எப்போது நிரப்ப திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டுமென சிபிஐ.யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் பணியிடங்கள் காலி* கடந்த ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, சிபிஐ.யில் செயல் அதிகாரிகள் அந்தஸ்தில் 822 பணியிடங்களும், சட்ட அதிகாரிகள் மட்டத்தில் 88 பணியிடங்களும், தொழில்நுட்ப அதிகாரிகள் பணிக்கு 97 பணியிடங்கள் என ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.* நாடு முழுவதும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சிபிஐ.யின் பலத்தை அதிகரிக்க கூடுதலாக 734 புதிய பணியிடங்களை உருவாக்குவது குறித்தும் ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது….

Related posts

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது