சின்ன மாத்தூர் சாலையில் பேருந்து நிறுத்த நிழற்குடை அகற்றம்: அதிமுக பிரமுகரை கண்டித்து போராட்டம்

 

திருவொற்றியூர், மார்ச் 4: மணலி மண்டலம், 19வது வார்டுக்கு உட்பட்ட சின்ன மாத்தூர் சாலையில் மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடை உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், பாஜ பிரமுகருக்கு சொந்தமான இடத்திற்கு செல்ல இடையூறாக உள்ளதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் என்பவர், நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் இந்த நிழற்குடையை இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன், கவுன்சிலர் காசிநாதன், நிர்வாகிகள் தாமரை செல்வன், மஞ்சம்பாக்கம் பாபு, கார்த்திக் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை இடித்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே இடத்தில் மீண்டும் பேருந்து நிறுத்த நிழற்குடையை அமைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தகவலறிந்து வந்த பால்பண்ணை காவல் ஆய்வாளர் வேலுமணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே, நிழற்குடையை இடித்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநர் சுபாஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியயோரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை