சின்னாற்றின் குறுக்கே தடுப்பணைகள் சீரமைப்பு

தர்மபுரி, ஜூன் 20: தர்மபுரி அருகே சின்னாற்றின் குறுக்கே 15 அணைகள் ₹15 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாலக்கோடு பஞ்சப்பள்ளியில் சின்னாறு அணை கடந்த 1972ம் ஆண்டு கட்டப்பட்டு, 1977ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த அணையில் 50 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. தற்போது அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இந்த அணைக்கு நீர்பிடிப்பு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, பெட்டமுகிலாளம் வனப்பகுதி உள்ளது. மழைக்காலங்களில் இந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த அணையை நம்பி 4500 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. தர்மபுரி, பாலக்கோடு நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் திறந்துவிடும் உபரிநீர் மாரண்டஅள்ளி தடுப்பணை வழியாக, ஒகேனக்கல் வந்து, காவிரி ஆற்றில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் உபரிநீர் சின்னாற்றில் வெளியேற்றப்படுகிறது. சின்னாறு அணையானது 60 கிலோ மீட்டர் நீளம் பயணமாகிறது.

இதில் 30 கிலோ மீட்டர் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக ஓடுகிறது. யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சின்னாற்று நீரை அதிகம் பயன்படுத்துகின்றன. கோடை தொடங்குவதற்கு முன்பாகவே சின்னாறு வறண்டுவிடும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பெய்து வருவதால், சின்னாறு அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. கடந்த ஆண்டு 2 முறை அணை நிரம்பியது. உபரிநீர் பல மாதங்களாக வெளியேற்றப்பட்டது. வெளியேற்றப்படும் உபரிநீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது. இரு மாதங்களுக்கு முன்பு பாசனத்திற்கு தண்ணீர் திறந்தவிடப்பட்டது. ஆனால் தற்போது அணையில் தண்ணீர் நிரம்பும் நிலையில் உள்ளது. அணைக்கு தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. வரும் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், மீண்டும் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றும் நிலை ஏற்படும். வீணாக காவிரி ஆற்றில் கலக்கும் நீரை தடுப்பணைகள் கட்டி சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சின்னாற்றின் குறுக்கே ஆங்காங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் சின்னாற்றின் குறுக்கே, 15 அணைகள் மற்றும் சின்னாறு அணை வலதுபுற கால்வாய் குறுக்கே நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ₹15 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்தல் பணி நடக்கிறது.

இதுவரை 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. வரும் 2024 டிசம்பர் 4ம் தேதியுடன் இப்பணிகள் முடிவடையும். பஞ்சப்பள்ளி அணை, ராஜபாளையம் அணை, சந்திராபுரம் அணை, மாரண்டஅள்ளி அணை, குஜ்ஜாரஅள்ளி பெரிய அணை, சிறிய அணை, பாவளி அணை, கடத்திக்கொள்ளு மேடு அணை, நல்லூர் மேல் அணை, நல்லூர் கீழ் அணை, கெசர்குலி அணை, வீரேகவுண்டன் அணை, கிருஷ்ண அய்யர் அணை, காடையனஅள்ளி அணை, கெண்டேனஅள்ளி அணை ஆகிய 15 அணைகளில் பணிகள் நடக்கிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மழைக்காலங்களில் காவிரியில் தண்ணீர் கலக்காமல் இருக்க, சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 15 அணைகள் சுமார் ₹15 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, புனரமைப்பு பணிகள் நடக்கிறது. மேலும் நவீனப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இந்த 15 அணைகள் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். 13 வருவாய் கிராமங்கள் பயனடையும். 15 இடத்திலும் 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது,’ என்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை