சின்னமனூர் அருகே தோப்புக்குள் தீப்பிடித்து வாழை, தென்னை சேதம்

சின்னமனூர், ஜூலை 10: சின்னமனூர் அருகே கன்னி சேர்வைப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மனைவி தாரங்கனி. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் இவர்களுக்கு சொந்தமாக தோப்பு உள்ளது. இங்கு தென்னை, செவ்வாழை பயிரிட்டுள்ளனர். இந்த தோப்பில் 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. மேலும் அதே நிலத்தில் மற்றொரு பயிராக அருகிலேயே ஊடுபயிராக 16 மாதங்களில் அறுவடைக்கு வரும் வகையில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த செவ்வாழைகள் தற்போது 8 மாத பயிராகவும் இருக்கிறது. இதில் சுமார் 200 செவ்வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென தோப்பில் தீ பிடித்ததால் ஏராளமான வாழை மரங்கள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. இதில் தீப்பரவி அருகில் இருந்த தென்னை மரங்கள், கீற்றுகளும் எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த சின்னமனூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனால், அதற்குள் தோப்பில் இருந்த ஏராளமான வாழை, தென்னை மரங்கள் எரிந்து சேதமானது. சேதமதிப்பு குறித்து தெரியவில்லை. வேளாண்மை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி