சின்னப்புத்தூரில் விவசாயிகளுக்கான முதற்கட்ட காரீப் பருவத்திற்கான பயிற்சி

 

திருப்பூர், ஜூலை 26: திருப்பூர் வட்டாரம் மங்கலத்தை அடுத்த சின்னப்புத்தூரில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதற்கட்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன், திருப்பூர் வட்டார வேளாண்மை அலுவலர் சுகன்யா, துணை வேளாண்மை அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

வேளாண்மை அலுவலர் சுகன்யா வரவேற்று பேசி, வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து விளக்கமாக பேசினார். மேலும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசும் போது, தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களையும் (மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நாார்சத்துகள்), இதனால் ஏற்படும் நன்மைகள் (உடலின் கொழுப்பு சத்தினை குறைத்தல், சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துதல் மற்றும் செரிமானத்தை துரிதப்படுத்துதல்) குறித்து விரிவாக பேசினார்.

மேலும், கோடை உழவு செய்யும் முறை மற்றும் பயன்கள் குறித்தும், குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரவல்ல கோ (எஸ்) 32 ரக சோளத்தின் சிறப்பம்சங்கள் (தானிய மகசூல் மற்றும் 100 சதவீதம் கால்நடைகளுக்கு ஏற்ற தட்டு மகசூல் தரவல்லது) குறித்தும், விதை மற்றும் வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் விதை நேர்த்தி, உரச்செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலினை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும், எடுத்து கூறினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்