சின்னசேலம் அருகே பரபரப்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலை

சின்னசேலம், ஜன. 7: அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை மற்றும் ரூ. 40,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நைனார்பாளையம் எல்லையில் வீ.கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் புதுவீடு கட்டி வசித்து வருபவர் ராமசாமி(50). இவரது மனைவி அலமேலு(45). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் வெளியூரில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராமசாமி, சென்னை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். அலமேலு, மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்துள்ளார். இதனால் நேற்றுமுன்தினம் மதியம் அலமேலு நைனார்பாளையத்திற்கு சென்று பூஜை பொருட்கள் வாங்க வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இவர் வெளியே சென்றுவிட்டு, சுமார் ஒரு மணி நேரத்தில் மீண்டும் வீடு திரும்பினார்.

அப்போது கேட் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.40,000 ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து அலமேலு, கீழ்குப்பம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கள்ளக்குறிச்சியில் இருந்து தடயவியல் நிபுணர் ராஜவேலு வரவழைக்கப்பட்டார். அவர் கொள்ளை நடந்த வீட்டில் ரேகைகளை பதிவு செய்தார். மேலும் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே நைனார்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் கொள்ளை நடந்துள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு