Sunday, July 7, 2024
Home » சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தால் என் பாக்கியம்!

சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தால் என் பாக்கியம்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி கிராமிய இசைக் கலைஞர் பூவிதா முருகன் சுப்ரமணியபுரம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் சசிகுமாருக்கு அண்ணியாக நடிப்பதற்கு ஒருவரை தேர்வு செய்கிறார்கள். அவருக்கு கேமரா, ஷூட்டிங் செட்டப் எல்லாம் பார்த்ததும் பதட்டமாகிறது. அவருக்கு பதில் வேறு யாராவது உடனே கிடைப்பார்களா? என்று படக்குழு தேடுகிறது. அந்த நேரத்தில் திண்டுக்கல் வட்டாரத்தில் கிராமிய இசை பாடல் கச்சேரிகள் நடத்திவரும் பூவிதா முருகன் என்கிற பெயர் அடிபடுகிறது. அவருக்கு தெரிந்த நபர் படக்குழுவின் அனுமதியோடு பூவிதாவிடம் கேட்கும் போது, ‘‘அண்ணே… எனக்கு நடிப்பெல்லாம் தெரியாது. முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்” என்று நம்பிக்கையோடு சொன்ன வார்த்தையினால், பிற்காலத்தில் இவரது நடிப்பு ரஜினிகாந்த், ராதா போன்ற நடிகர்களின் பாராட்டை பெறும் அளவிற்கு உயர்த்தியது. ‘மைனா’ திரைப்படத்தில் குறுவம்மா (அமலாபாலின் அம்மா) கதாபாத்திரத்தில் வாழ்ந்ததன் மூலமாக திரைத்துறையினர் மற்றும் பத்திரிகை விமர்சனங்களில் பாராட்டப்பட்ட பூவிதா முருகன் தன் கதையினை தோழியரோடு பகிர்கிறார்.  ‘‘கிராமத்தில் இருந்து வந்த பொண்ணு. திண்டுக்கல் மாவட்டம் பிள்ளம்நாயக்கன் பட்டி என்கிற குக் கிராமம் தான் சொந்த ஊர். விவசாய குடும்பம். என் கூட பிறந்தவங்க 2 அண்ணன், 3 அக்கா. என்னோடு சேர்த்து ஆறு பிள்ளைங்க. நான்தான் கடைசி. கிராமத்தில் படிக்க வசதி இல்லைனு பக்கத்திலிருந்த மேட்டுப்பட்டி டவுனுக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க. எங்களுக்கு என்று தோட்டம் இருந்தது. அதில் அம்மா, அப்பா இருவரும் விவசாயம் பார்த்துக்கிட்டாங்க. மற்ற விவசாயத்துடன் சேர்த்து வெத்தலை கொடிக்கான தோட்டமும் போட்டிருந்தோம். எல்லா ஊர்களுக்கும் எங்க தோட்டத்தில் இருந்து வெத்தலை ஏற்றுமதி பண்ணுவாங்க. நான் கொஞ்சம் பெரிய பொண்ணானதும், நானும் அம்மா, அப்பாவுடன் தோட்டத்தில் உதவியா இருந்தேன்.  எங்க வீட்டு பக்கத்தில் ஒரு விநாயகர் கோயில் இருக்கும். அங்கு ஐயப்ப பக்தர்கள் பஜனை எல்லாம் வைப்பாங்க. அவங்க பாட பாட அந்த வரிகள் கேட்டு நம்மலும் அதை பாட வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் வந்தது. அப்போது எனக்கு வயது ஆறு. அதே மாதிரி கிராமங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், புராண நாடகங்கள் எல்லாம் சிறு வயதிலிருந்தே ஆர்வமாக பார்ப்பேன். விஜயலட்சுமி-நவநீதன் கிருஷ்ணனோட நாட்டுப்புற பாடல்கள் என்றால் அவ்வளவு விருப்பம். இப்படியே பாடல்கள் கேட்பது, பாடுவது என்று எந்நேரமும் இருந்து கொண்டிருந்தேன். அது பள்ளி வகுப்பறையிலும் இருந்ததால், சக மாணவிகள் ஆசிரியர்களிடம் சொல்லிக் கொடுத்துவிட்டனர்.ஆசிரியரும் என்னை அழைக்க, ஒரு வேளை தண்டனைதான் கொடுக்கப் போறாங்களோனு பயந்து பயந்து போனேன். அங்கு போனால் ‘நீ பாடிட்டே இருக்கேனு சொல்றாங்க. பாட்டு புக்கெல்லாம் வச்சிருக்கியாமே? ஒரு பாட்டு பாடு’னு சொல்லிட்டாங்க. இது என்ன புதிதா இருக்கேனு ‘தோட்டு கடை ஓரத்திலே…’ விஜயலட்சுமி-நவநீதன் கிருஷ்ணனோட பாடலும், ‘சிந்து நதியின் இசை…’ என்ற பாரதியார் பாடலும் பாடினேன். ‘இந்தப் பொண்ணு நல்லா பாடுறா…’னு பள்ளிகளில் நடக்கும் பாடல் போட்டிக்கெல்லாம் அழைத்து போனாங்க. அப்படித்தான் என்னுடைய கலைப் பயணம் நான் ஐந்தாவது படிக்கும் போதே ஆரம்பமானது. கிராமிய பாடல்கள் தான் நான் பெரும்பாலும் பாடுவேன் என்பதால், போட்டியிலும் விஜயலட்சுமி அம்மா மாதிரியே சுங்கடி சேலை கட்டிக்கிட்டு கையில் கால்ரா வச்சுகிட்டு பாடுவேன். பாரதியார் பாடல் என்றால் அவரைப் போல் வேடமிட்டு பாடுவேன். இப்படியே பத்தாவது படிக்கும் வரை பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். பத்தாவது முடித்ததும் என்னுடைய 16 வயதிலேயே திருமணம் செய்திட்டாங்க. அடுத்து 18 வயதில் ஒரு பெண் குழந்தை, 20 வயதில் மற்றொரு பெண் குழந்தை. கொஞ்சம் பிள்ளைங்க விவரம் தெரிய ஆரம்பித்தவுடன், குடும்பம், பிள்ளைங்கனு வாழ்க்கையை சுருக்கிக் கொள்ளக் கூடாது. சின்ன வயதில் எவ்வளவோ மேடைகளில் பாடி இருக்கிறோம், அதை ஏன் தொடரக் கூடாது என்று திண்டுக்கல்லில் இருக்கிற ‘ஆல்வின்’ இசைக்குழுவில் வாய்ப்பு கேட்டு சென்றேன். என் குரல் வளத்தை பார்த்து, என்னை அவங்க டீமில் சேர்த்துக்கிட்டாங்க. வீட்டையும் பார்த்துட்டு, எனக்கு பிடித்த வேலையும் செய்திட்டு இருக்கும் போது தான் கிராமிய கலையில் இருந்த சந்தோஷ் அண்ணாகிட்ட இருந்து ஃபோன் வந்தது. ‘திண்டுக்கல்லில் ஒரு படம் எடுக்குறாங்க. ஏற்கனவே மதுரையிலிருந்து வந்த ஒரு ஆர்டிஸ்ட் கேமரா, ஷூட்டிங் செட்டப் எல்லாம் பார்த்துட்டு பதட்டமாகிட்டாங்க. சசிக்குமார்னு ஒரு புது டைரக்டர். அவரும் தான் நடிக்கிறார். அவருடைய அண்ணி கேரக்டர்ல நடிக்கணும்’னு சொன்னார். ‘அண்ணே எனக்கு நடிப்பெல்லாம் என்னானு தெரியாது. முயற்சி பண்ணி பார்க்குறே’னு சொல்லி போனேன். 2 ஷார்ட்டு நடிச்சு, டயலாக் பேசினதும் எல்லாரும் கை தட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அந்தப் படத்தைப் பார்த்திட்ட ராசு மதுரவன் சார், ‘மாயாண்டி குடும்பத்தார்’- படத்திலும் ஒரு அண்ணி கதாபாத்திரத்துக்கு சரியா இருப்பீங்கனு வந்து பேசுனாங்க. அதில் பொன்வண்ணன் சாருக்கு மனைவியாக நடிச்சேன். இதை பார்த்த இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் நடிகர் விதார்த்தும் ‘மைனா’ படத்தில் அமலா பாலுக்கு அம்மாவா நடிக்க தேர்வு செய்தாங்க. இப்படி ஒவ்வொரு படமா பார்த்து எனக்கான நடிப்பு வாய்ப்பு வந்திட்டு இருக்கு’’ என்றவர் வாகை சூடவா, அகத்தினை, மஞ்சள் குங்குமம், ஏகனாபுரம் என முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘ஆண்டவன் கட்டளை’யில் விஜய் சேதுபதி சாருக்கு அக்காவா வந்திருப்பேன். ‘மரியான்’-ல அப்புக்குட்டி அம்மா. இப்படி நல்ல நல்ல கதாபாத்திரங்கள் நடித்து வந்தாலும் கிராமிய கலையில், எப்போதுமே பயணித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா துறைக்கு வந்த புதிதில் பாலா சார் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்து விஜய் சேதுபதி சாருக்கு அம்மா கதாபாத்திரம். இது தான் என் சினிமா ஆசை. நடிப்பதோடு மட்டும்இல்லாமல் சிறு வயதிலிருந்தே பாட்டோடு பயணித்துக் கொண்டிருக்கும் எனக்கு திரைத்துறையில் பாட வாய்ப்பு அமைந்தாலும் அதை பெரும் பாக்கியமாக பார்க்கிறேன். தலைமுறை தலைமுறையாக இசைக் கச்சேரியிலோ, திரையுலகிலோ யாரும் என்னை சார்ந்தவர்கள் இல்லை. கிராமத்திலிருந்து வந்தவளின் நடிப்பை பார்த்து ரஜினி சார், ராதா மேம் மற்றும் திரைப்பிரபலங்கள், பத்திரிகை விமர்சனங்களில் பாராட்டியது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இதையெல்லாம் தாண்டி எந்த அளவுக்கு கலையை நேசிக்கிறேன் என்பதற்கு என் வாழ் நாளில் நடந்த சம்பவம் மறக்க முடியாத ஒரு விஷயம். மேடை கலைஞர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து சுத்துப்பட்டி கிராமங்களில் நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்கேன். அப்படி ஒரு நிகழ்ச்சிக்காக அட்வான்ஸும் வாங்கிட்டேன். இரவு ஏழு மணிக்கு நிகழ்ச்சி. அன்று மதியம் மூன்று மணிக்கு எங்க அப்பா இறந்துட்டாங்க. என்ன பண்றதுனே தெரியல. என்னை நல்லா புரிந்து கொண்டவர் என் அப்பா… அந்த நம்பிக்கையில், ‘அப்பா நான் அட்வான்ஸ் வாங்கிட்டேன். என் உயிரைவிட பாடுவதையும், என்னை நம்பி இருக்குறவங்களையும் ரொம்ப நேசிக்கிறவ… அந்த நிகழ்ச்சி முடுச்சுட்டுதான் வருவே’னு அடக்க முடியாத  அழுகையோடு நிகழ்ச்சிக்கு போனேன்.    முதலில் ஒரு அம்மன் பாட்டு பாடிட்டு ஸ்கிரீனுக்குள்ள வந்து அழுதுட்டு இருக்கும் போதே, ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்தேன். அங்கு பார்வையாளர்கள் மத்தியில் சின்னதா சலசலப்பு ஏற்பட்டு சண்டை ெபரிதானது. ஏற்கனவே அப்பாவை இழந்த துக்கத்தில் இருந்த நான் மைக்கை எடுத்து, ‘எங்க அப்பாவ ஃப்ரீசரில் வச்சுட்டு இங்க உங்களுக்காக வந்திருக்கேன். நான் போய் நாளைக்கு தான் அடக்கம் பண்ணனும். அமைதியா கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கன்னு’ கேட்டேன். சண்டை போட்டவங்க அமைதியாயிட்டாங்க. வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள் அது. நான் ரொம்ப நேசிக்கிறது கிராமிய கலை, திரையுலக பயணம். அதில் மற்றவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் பேரானந்தம்” என்கிறார் பூவிதா முருகன். தொகுப்பு: அன்னம் அரசு

You may also like

Leave a Comment

18 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi