Saturday, July 6, 2024
Home » சிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்!

சிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்!

by kannappan

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்ற திருப்பதியில் உள்ள  திருமணி மாடக்கோவில் என்னும் திவ்ய தேசத்தில் பெரும் விழா நடக்கும். அதில் அந்தத் திருப்பதியை சுற்றியுள்ள பதினோரு வைணவ (ஆழ்வார்களால் பாடப்பட்ட) திவ்ய தேசத்துப் பெருமாள்கள் அனைவரும், கருடசேவை கண்டு அருள்வார்கள். அப்போது திருமங்கை ஆழ்வார், அந்தப் பதினோரு பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்வார். ஆழ்வார் அனைத்து பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்தபின், மணவாள மாமுனிகள் திருமங்கை ஆழ்வாரை மங்களாசாசனம் செய்வார். இந்தக் கண்கொள்ளா காட்சியை காண, உலகெங்கிலும் இருந்து பல வைணவப் பெருமக்கள் திரளாகக் குவிவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விழாவின் முதல்நாள் இரவில், திருநாங்கூரைச் சுற்றி உள்ள வயல்வெளிகளில், பலமாகக் காற்று வீசி,‘‘சல சல” என்று ஒரு சத்தம் கேட்கும். இந்த சத்தத்தையே ஆழ்வாரின் வருகையாக மக்கள் கொண்டாடுவார்கள். மேலும், காற்று ரூபமாக வந்த ஆழ்வாரின் பாதம் பட்ட வயலில் விளைச்சலும் அமோகமாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். மறுநாள், திருவிழாவின்போது, புறப்பாடு ஆகி வரும் திருமங்கை ஆழ்வாரின் திரு உருவமும் (அதாவது விக்ரகம்) சாதாரணமானது இல்லை. ஆழ்வாரின் காலத்தில், அவர் திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசத்தில் இருந்த போது செய்யப்பட்டது. தூய பொன்னால் ஆனது. அதைச் செய்து முடித்த பின், திருமங்கை ஆழ்வாரிடம் அதைக் காட்டினார்களாம். அப்போது ஆழ்வார் அந்த பிம்பத்தின் எதிரில் நின்று,” இங்கே வா” என்று அழைத்தபோது, அது நடந்து ஆழ்வாரிடம் வந்ததாம். ஆழ்வாரும் அதை வாஞ்சையோடு தழுவி, தனது சக்தி அனைத்தையும் அந்த பிம்பத்தில் செலுத்திவிட்டு முக்தி அடைந்தாராம். இப்போது அந்த விக்ரகம் திருநகரி என்னும் திவ்ய தேசத்தில் இருக்கிறது.(மணிமாடக் கோவில் அருகில் உள்ள மற்றொரு திருநாங்கூர் திவ்ய தேசம் தான் திருநகரி. கருட சேவை காணும் பதினோரு பெருமாள்களில் இந்தத் தலத்து பெருமாளும் ஒருவர்) ஆழ்வார், இந்த திருவுருவத்தின் வடிவில் தான், மறுநாள் புறப்பாடு ஆகி வந்து, பதினோரு பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்வார். இவை அனைத்தும் நாம் அறிந்த செய்திகள் தான். ஆனால், நாம் அறியாத ஒரு விஷயமும் இருக்கிறது. திருமங்கை ஆழ்வார், தன் வாழ்நாளில் ஆசை ஆசையாய் பூஜித்த திருமாலின் திருஉருவம் இருக்கிறது இல்லையா? அந்தத் திரு உருவம், இன்றும் திருநகரி கோவிலில்தான் இருக்கிறது. ஆம். அந்தப் பெருமாளின் பெயர்”சிந்தனைக்கு இனியான்” என்பது ஆகும். சங்கும் சக்கரமும் கையில் எந்தி, வலது கையால் அபயம் அளித்து, இடது கையை இடையில் நிறுத்தி, திருமகள் நிலமகள் சமேதனாக, காட்சி தருகிறான். ஆழ்வாரின் சிந்தனைக்கு இனியான். இந்தப் பெருமாள் முதலில் திருக்குறுங்குடியில்தான் இருந்தானாம். பின்பு, ராமானுஜர் காலத்தில் தான் இங்கு கொண்டுவரப்பட்டானாம். இந்தப் பெருமாளுக்கு பூஜை செய்வதற்காக ‘‘சிந்தனைக்கு இனியான் தோட்டம்” என்ற தோட்டம் அமைத்து, அதில் பூத்த மலர்களால் ஆழ்வார் அவனை பூஜித்தாராம். இன்றும் அந்த தோட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தப் பெருமாளை ஆழ்வார், பின்வருமாறு மங்களாசாசனம் செய்கிறார். “வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்தற்பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய், திருவே,என்ஆருயிரே,அம்தளிர் அணிஆர் அசோகின் இளம்தளிர்கள் கலந்துஅவை எங்கும் செந்தழல் புரையும் திருவாலி அம்மானே”இப்படி ஆழ்வாரைப் போன்ற ஞானிகளின் சிந்தனைக்கு இனிமையாக இருக்கிறான் பகவான். ஆனால், அவனது, சிந்தனைக்கு இனிமையாக இருப்பது ஏது? இந்த கேள்விக்கு அருணகிரிநாதர் அற்புதமாக பதில் சொல்கிறார். “…..பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் …… றமராடிப்பாவியி ராவண னார்தலை சிந்திச்சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் …… கினியோனே”அதாவது, முன்பு, அந்தப் பெரிய அனுமனின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து, பாவியாம் ராவணனுடைய தலைகள் சிதறவும், உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும் செய்து, மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவியமாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே என்று செந்தில் ஆண்டவனை பாடுகிறார் அருணகிரிநாதர்!ஞானிகளின் சிந்தனைக்கு இனிமையாக இருக்கும் பகவானது சிந்தனைக்கு இனிமையாக இருப்பது, முருகனின் திருவிளையாடல்கள்தான், என்று சாதிக்கிறார் அருணகிரிநாதர். ஓரிரு இடங்களில் இல்லை பல இடங்களில் சொல்கிறார். ‘‘மாயன் சிந்தை மகிழு மருகா” என்று இதே செந்தில் ஆண்டவனை அவர் வேறு ஒரு திருப்புகழில் பாடுகிறார். (தொந்தி சரிய – திருப்புகழ்) இப்படி அவர் சொல்வதற்கு காரணம் என்ன?வள்ளி தேவசேனையின் பிறப்பு!ஒரு முறை வைகுண்டத்தில், தேவ மாதர்கள் கந்தனின் பெருமையை பாடி ஆடினார்கள்! அதைக் கேட்ட திருமாலின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகிற்றாம். அந்தக் கண்ணீர் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு மங்கைகளாக மாறியது. அவர்கள் இருவரும் முருகனை மணக்க விரும்பி, தந்தை திருமாலிடம் இருந்து உபதேசம் பெற்று, தவம் செய்தார்கள். தவத்தின் பயனாக அவர்கள் இருவரும், தேவசேனையாகவும் வள்ளியாகவும் பிறந்து, முருகனை மணந்தார்கள். இன்று நாம் முருகனை வள்ளி தேவசேனா சமேதனாக கண்குளிர தரிசிக்கிறோம் என்றால், அதற்கு திருமாலின் சிந்தனை, கந்தனை எண்ணியதால், இனித்துப் போனதே காரணம் இல்லையா?ராமாயணமும் கந்த புராணமும்!அது மட்டுமா? கந்தன் செய்த திருவிளையாடல்கள் எல்லாம், அவனது மாமன் திருமாலின் சாயலில் அல்லவா இருக்கிறது? ராமனாக பிறந்த திருமால் சீதையின் சிறை அறுத்தான். கந்தப் பெருமான் தேவர்களின் சிறை விடுத்தான். ராமாயணத்தில் அனுமனின் தூது என்றால், கந்தபுராணத்தில் வீரபாகுவின் தூது. அங்கே ராமாயணத்தில், ராவணனை வதைக்க இந்திரன் தேர் தந்தான். கந்தன், சூர பத்மனை அழிக்க, தானே மயிலாகி முருகனுக்கு சேவை செய்தான் இந்திரன். இப்படி, மருமகன் தன்னுடைய, சாயலில் இருப்பதை எண்ணி எந்த ஒரு அம்மானுக்கு, தான் சிந்தை இனிக்காது?திருமால் மருகன்!நன்கு யோசித்தோம் என்றால், திருமால் மருகன் என்பது, அது அந்த விநாயகனையும் குறிக்கும் என்று விளங்கும். ஆனால் உலகில், திருமால் மருகன் என்று சொன்னால், உடனே நமக்கு நினைவுக்கு வருவது ஆறுமுகமும், பன்னிரு தோளும், வேலும் மயிலும் தானே? ஆக மாமனாகிய தன்னுடைய பெயர், விளங்க வந்த மருமகனை எண்ணி எந்த மாமன் சிந்தை மகிழ மாட்டான்? வைணவப் புலவர் பெற்ற பேறு!திருக்குறுங்குடியில் நம்மாழ்வாரின் திருவடித் தாமரையில் பக்தி பூண்டவராய், திருமாலை அன்றி, மற்றொரு தெய்வத்தை தொழாதவராய் ஒரு புலவர் இருந்து வந்தார். அவரது திருநாமமே வைணவப் புலவர் என்பது ஆகும். அவரது சிங்காரத் தமிழ் சொல்லில் மயங்கிய கந்தன் அவரது கனவில் தோன்றினான். அவன் தோன்றிய விதத்தை பின்வருமாறு ‘‘புலவர் புராணம்” என்ற நூல் விளிக்கும். ‘‘வேலோர் கைபதுமத்தில் ஏந்தி மற்றொரு கரமலரில் ஆழி கொடு கடிது தோன்றி”அதாவது, ஒரு கையில் வேலை ஏந்தி, மற்றொரு கையில் சக்கரத்தை தாங்கி வந்து காட்சி தந்தானாம் முருகன். தீவிர வைணவரான அந்தப் புலவரை தடுத்தாட் கொள்ளவும், தான் வேறு தன் மாமன் நாரணன் வேறு இல்லை என்பதை உலகிற்கு காட்டவும் முருகன் செய்த நாடகம் இது. இப்படி நடையாக நடந்து அந்தப் புலவரிடம் இருந்து செந்திலைப் போற்றி ஒரு கவி பாடும் படி கேட்டு வாங்கிக் கொண்டான் கந்தன். மொத்தத்தில் மாமனோடு இரண்டறக் கலந்த மருமகனை, திருமால் சிந்தை மகிழும் மருகா என்று சொல்வதில் என்ன பிழை இருக்கிறது.? திருமாலின் வாக்கும் நாமமும்! கண்ணன் பகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் ‘‘நான் சேனாதிபதிகளில் சுப்பிரமணியனாக இருக்கிறேன்” என்று சொல்கிறார். அது மட்டுமில்லை, பீஷ்மர் திருமாலின் ஆயிரம் நாமங்களை அழகாக வரிசை படுத்தி சொல்கிறார் இல்லையா? (ஆதி சங்கரரின் உரையின்படி) அதில், 327 ஆம் நாமமாக ‘‘ஸ்கந்தன்” என்ற நாமம் வருகிறது. இதற்கு பகவத்பாதர், ‘‘ஸ்கந்ததி அம்ருத ரூபேன” என்று உரை செய்கிறார். அதாவது பக்தர்களுக்கு, அமுதமாகி பொங்கி வழிபவன் என்று பொருள். இதை ‘‘கருணையால் அமுதங்காலும்” என்ற கம்பன் வாக்கோடு ஒப்பு நோக்கலாம்! மொத்தத்தில் மாமனுக்கும் மருகனுக்கும் பெயர் கூட ஒன்றே தான்.  திருமாலின் சிந்தனைக்கு இனியவன் முருகன்தான் என்பதை மேலும் பற்பல ஆதாரங்களைக் கொண்டு நிலை நாட்டலாம். அதிகம் வளர்பானேன், தை அமாவாசையன்று ஆழ்வார் மற்றும் ஞானிகளின் சிந்தனைக்கு இனியவனை, திருநகரியில் உறையும் வேத முதல்வனை போற்றுவோம், அதே சமயம் தைப்பூசத்து அன்று செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளை போற்றுவோம். அவ்வாறு செய்தால் நமது சிந்தையும் தேனாய் தித்திக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.ஜி.மகேஷ்…

You may also like

Leave a Comment

10 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi