சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை கைப்பற்றும் எண்ணம் இல்லை.! புகார் இல்லாத கோயில்களில் இந்து அறநிலையத்துறை தலையிடாது; அமைச்சர் சேகர்பாபு பேட்டி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை வந்து தரிசனம் செய்தார். பின்னர் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு ஆதினம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியர் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். இதனை தொடர்ந்து ஆதீன வளாகத்தில் 25 அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகையை திறந்து வைத்து மரக்கன்று நட்டார். பின்னர் வேதாகமம் பாடச்சாலையை பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோயில்களில் திருப்பணிகள் துவங்கியுள்ள கோயில்கள், பணிகள் துவங்க உள்ள கோயில்களை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டார். தருமபுரம் ஆதீனம் மிக சிறப்பாக செயல்படுகிறது. இங்கு பயிலும் வேதாகமம் பாடசாலை மாணவர்களுக்கு வேதாகமதத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றுத்தருகிறது. இந்த ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 27 கோயில்களில் 18 கோயில்களுக்கு திருப்பணி துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கடையூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் மதிய உணவு வழங்க ஆதினமும், அறநிலையத்துறையும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. கொரோனா காலத்தில் கனகசபையில் வழிபாடு நடத்துவது நிறுத்தப்பட்டது. அங்கு வழிபட தீட்சிதர் அனுமதிக்காததால் கனகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து வழிபாடு நடத்த ஐகோர்ட் அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. இது கோயில் நிர்வாகத்துக்கு எதிராக எடுக்கப்பட்டது இல்லை. நீதிமன்ற உத்தரவை அறநிலையத்துறை செய்தது. புகார் இல்லாத கோயில்களில் இந்து அறநிலையத்துறை நுழையக்கூடாது என முதல்வர் கூறியுள்ளார். அதன்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கோயில் விளை நிலங்களை குத்தகைதாரர்கள் வீட்டுமனைகளாக மாற்றி வருவதாக புகார் வருகிறது. வணிக நோக்கோடு குத்தகைதாரர்கள் செயல்பட்டு கோயிலுக்கும், ஆதினங்களுக்கும் வரி செலுத்தாமல் இருந்தால் ஆக்ரமிப்பாளர்கள் அகற்றப்படுவர். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதுரகிரி உள்பட 5 மலைக்கோயில்களில் ஆய்வு நடந்து வருகிறது. பழமை மாறாமல் அந்த கோயில்கள் செப்பனிடப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆதீனம் அளித்த பேட்டி: மரபு வழி மாறாமல் நடைபெறும் இந்த ஆதீனத்துக்கு அரசின் அரவணைப்பு உள்ளது. ஆதீன கல்லூரியின் 25வது ஆண்டுவிழாவில் அப்போதைய முதல்வர் கலைஞர் கலந்துகொண்டார். 50ம் ஆண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டார். வரும் ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரியின் 75ம் ஆண்டுவிழா நடக்கிறது. அதில் தமிழக முதல்வர் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு