சிதம்பரத்தில் பொதுமக்கள் பீதி; கான்சாகிப் வாய்க்காலில் உலா வரும் முதலைகள்: தண்ணீருக்குள் இறங்க வேண்டாமென எச்சரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக கன்சாகிப் வாய்க்காலில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீருக்குள் இறங்க வேண்டாமென வனத்துறை எச்சரித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியை ஒட்டியவாறு, கான்சாகிப் வாய்க்கால் செல்கிறது. இவை வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், நற்கந்தன்குடி, கனகரப்பட்டு, நடராஜபுரம், கொடிபள்ளம், கோவிலாம்பூண்டி, மீதிகுடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசன வாய்க்காலாக உள்ளது. இந்த வாய்க்காலில் மழை மற்றும் வெள்ள காலங்களில் சிதம்பரம் அருகே உள்ள வக்கரமாரி ஏரியில் இருக்கும் முதலை மற்றும் முதலை குட்டிகள் கரையேறி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாய்க்கால், குளம் மற்றும் தாழ்வான நீர்நிலை பகுதிகளில் தங்கி சர்வ சாதாரணமாக உலா வருகிறது.இந்த முதலைகளால் வயல்வெளியில் வேலை செய்து விட்டு மாலை மற்றும் காலை நேரங்களில் குளிக்கவும், கை, கால்களை கழுவ வரும், பொதுமக்களை கடித்து வருகிறது. இதுதொடர் கதையாக உள்ளது. முதலைகளால் உயிர் பலி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் தண்ணீர் குடிக்க நீர்நிலைகளில் இறங்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் முதலைகள் கடித்து இரையாக்கி வருகிறது.இந்நிலையில், சிதம்பரம் ஓ.பி மெயின் ரோடு வழியாக செல்லும் கன்சாகிப் வாய்க்காலில் முதலைகள் தஞ்சமடைந்துள்ளது. அதில் ஒரு முதலை நேற்று மாலை வாய்க்கால் கரையில் சர்வசாதாரணமாக உலா வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து, முதலை தண்ணீருக்குள் சென்று விட்டது. இந்த வாய்க்காலில் பெரிய மற்றும் சிறிய அளவில் பல முதலைகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எனவே முதலைகளை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், இந்த வாய்க்காலில் முதலை உள்ளது என பெயர் பலகை வைத்துள்ளோம். மேலும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே யாரும் வாய்க்காலில் குளிக்க மற்ற வேறு பயன்பாட்டிற்காக இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்….

Related posts

அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: அரசு!