சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் திருடிய ஆட்டை கோயிலில் விட்டு சென்ற மர்ம நபர்கள்

நெல்லை:  களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தை  சேர்ந்தவர் நம்பி (61). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.  பகலில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை இரவில் அவர் வீட்டின் அருகே கட்டி  போடுவது வழக்கம். சம்பவத்தன்றும் அதுபோல அவர் ஆடுகளை தனது வீட்டின் அருகே கட்டி  போட்டிருந்தார். இந்நிலையில் இரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம  நபர்கள் இருவர், நம்பி கட்டி போட்டிருந்த ஒரு ஆட்டை திருடிச் சென்று விட்டனர். மர்ம  நபர்கள் ஆடுகளை திருடும் சிசிடிவி காட்சிகள் நேற்று முன்தினம் வெளியானது.  இதுபற்றி களக்காடு போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி  வந்தனர். மர்ம நபர்கள் தங்களது முகத்தை துண்டால் மறைத்துள்ளனர். சிசிடிவி  கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும்  முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். திருடப்பட்ட ஆடு கோவிலம்மாள்புரம் சுடலை  ஆண்டவர் கோயிலுக்கு நேர்ச்சை செலுத்த நம்பி வளர்த்து வந்த ஆடு ஆகும். இதன்  மதிப்பு ரூ.21 ஆயிரம் ஆகும். இதனிடையே ஆடு திருடிய சிசிடிவி காட்சிகள்  வெளியானதால் நாம் சிக்கி கொள்வோம் என்று அச்சமடைந்த மர்ம நபர்கள் மீண்டும்  ஆட்டை நேற்று முன்தினம் இரவில் கோவிலம்மாள்புரம் சுடலை ஆண்டவர் கோயிலில்  விட்டு, விட்டு சென்று விட்டனர். கோயிலில் நின்ற ஆட்டை நம்பி  மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு வந்தார். இந்த சம்பவம் இப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது

தஞ்சையில் அரசு பேருந்து நடத்துனர் இடமாற்றம்