சிசிடிவி, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு புதிய காவல் நிலையம் அமைக்க முடிவு: பயணிகள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை

சென்னை, செப்.23: பயணிகள் பாதுகாப்பு கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய, புதிய காவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து முனையம் கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணி சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ₹400 கோடி செலவில் நடந்து வருகிறது. தினசரி 1.5 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 200 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய மின் தகடுகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. பேருந்துகள் நெரிசலில் சிக்காமல் செல்ல, நிலையத்தின் பின்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அய்யஞ்சேரி சாலை சீரமைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைக்கப்பட இருக்கிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் இணைக்கும் புதிய நிலையமாக இது இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ரயில் இணைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. அதில் முதற்கட்டமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் காவல் நிலையம் வர உள்ளது. நவீன வசதிகளுடன் காவல் நிலையத்தில் இருந்தே பயணிகளை கண்காணிக்கும் வகையில் இந்த காவல் நிலையமானது அமைக்கப்பட இருக்கிறது. இங்கு 70க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்மால் பேருந்து நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்