சிங்கங்களுக்கு கொரோனா எதிரொலி: முதுமலை காப்பகத்தில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை..!!

நீலகிரி: வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் வனத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன்பு 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவற்றில் நீலா என்ற பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இதையடுத்து தொற்று உறுதியான மற்ற சிங்கங்கள் தனித்தனியாக அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் வனத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கால்நடை மருத்துவர் ராஜேஷ், யானைகளின் தும்பிக்கையில் இருந்து சளி மாதிரிகளை சேகரித்தார். ஒரு மக்னா யானை, 6 பெண் யானைகள் உள்ளிட்ட 28 யானைகளின் சளி மாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்தனர். இந்த மாதிரிகளை உத்திரபிரதேசத்தில் உள்ள வன உயிரியல் ஆய்வு மையத்திற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
இதனிடையே வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் பிடிபட்ட ரிவால்டோ என்ற யானைக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முதுமலையில் வளர்ப்பு யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார். 

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி