சிகிச்சை அளிக்காமல் டாக்டர்கள் அலட்சியம் தந்தையை இழந்த மகள் அமைச்சரிடம் ஆவேசம்: ஓட்டு கேட்க மட்டும் வர்றீங்களே…

ராஞ்சி: வட மாநிலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்காமல், பலர் தங்கள் குடும்பத்தினரை மருத்துவமனை வாசலில் இழக்கும் பரிதாபம் அதிகளவில் நடக்கிறது. ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகொரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், அந்த நோயாளிகள் உயிரிழக்கும் பரிதாபம் நடக்கிறது. ஜார்கண்ட மாநிலம், ஹசாரிபாக்கை சேர்ந்த இளம்பெண், கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனாவால் பாதித்த தனது தந்தையை அழைத்துக் கொண்டு, தலைநகர் ராஞ்சியில் உள்ள சர்தார் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்குள்ள டாக்டர்களிடம், தனது தந்தை ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி மன்றாடினார். ஆனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக டாக்டர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. பின்னர், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த அவருடைய தந்தையை ஒரு டாக்டர் வந்து பரிசோதித்தார். ஆனால், அதற்கு முன்பாகவே அவர் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதனால், அந்த இளம்பெண் சோகத்தில் கதறி அழுதார். டாக்டர்களிடம் சண்டை போட்டு விட்டு, தந்தையின் சடலத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். மருத்துவமனை வாயில் கதவுக்கு அருகே அவர் வரும்போது, ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தாவின் கார் உள்ளே நுழைந்தது. கொரோனா வார்டில் அளிக்கப்படும் கொரோனா சிகிச்சை நிலவரத்தை பார்வையிட அவர் வந்திருந்தார். அவரை பார்த்ததும் ஆவேசம் அடைந்த இளம்பெண், ‘மந்திரி ஜி… எனது தந்தைக்கு சிகிச்சை அளிக்கும்படி அரை மணி நேரத்துக்கு மேலாக டாக்டர்களிடம் கெஞ்சி கொண்டிருந்தேன். ஒருவரும் வரவில்லை. ஆனால், நீங்கள் மட்டும் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்…’’ என்று ஆத்திரம் பொங்க கேட்டார். ஆனால், அமைச்சரின் காரின் அதை கண்டுக் கொள்ளாமல் உள்ளே சென்று விட்டது. இந்த பெண்ணின் ஆவேச கேள்வி அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்ற மற்றொரு பரிதாப சம்பவம், பீகாரிலும் நடந்துள்ளது.  இம்மாநிலத்தில் உள்ள லகிஷ்சாராய் என்ற இடத்தை சேர்ந்தவர் வினோத் சிங். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட அவர், தலைநகர் பாட்னாவில் உள்ள நாளந்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். பாதுகாப்பு உடைகளுடன் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது, கொரோனா வார்டை பார்வையிட இம்மாநில சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே வருவதாக இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதில் டாக்டர்கள் தீவிரமாக இருந்தனர். வினோத் சிங்கின் மகன் அபிமன்யூ குமார், டாக்டர்களிடம் சென்று தனது தந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி கெஞ்சினார். ஆனால், அவர்கள் ஏற்பாடுகளிலேயே கவனமாக இருந்தனர். இதன் காரணமாக, ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக வாகனத்தில் அமர வைக்கப்பட்டு இருந்த வினோத் சிங் பரிதாபமாக இறந்தார். டாக்டர்களிடம் இந்த அலட்சியம் பற்றி அமைச்சர் பாண்டேவிடம் கேட்டபோது, ‘‘சில நேரங்களில் இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்து விடுகிறது. அதற்காக கவலை கொள்கிறோம்,’’ என்றார்….

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு