Tuesday, July 2, 2024
Home » சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை இன்னுயிர் காப்போம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை இன்னுயிர் காப்போம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by kannappan

சென்னை: தமிழகத்தின் எந்த பகுதியில் சாலை விபத்து நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் என 609 மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டமான ‘இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில், சாலை விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில்  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்ற குறளுக்கு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அவர் சொன்னார், அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படி கைகள் உடனடியாக செயல்பட தொடங்குகிறதோ, அதை சரிசெய்ய வேண்டும் என்று எண்ணுகிறதோ, அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தை போக்க துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும் என்று அவர் எழுதியிருக்கிறார். அப்படி உடனடியாக உதவக்கூடிய வகையில், தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த “இன்னுயிர் காப்போம் திட்டம்”. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். அத்தகைய  தோழமை எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த “இன்னுயிர் காப்போம் திட்டம்”. சாலை விபத்துக்களை பொறுத்தவரையில், நமது நாட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது. அது உள்ளபடியே நமக்கு மிகுந்த வருத்தத்தை தந்துகொண்டிருக்கிறது. சாலை விபத்துகளால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு உயிர் இறப்பிலும், அந்த நபர் மட்டுமன்றி அந்த குடும்பத்தின் எதிர்காலமே ஒடுங்கி விடுகிறது. சாலை விபத்துகளில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் என்பதையும் எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், விலைமதிக்க முடியாத இளைஞர்களின் எதிர்காலத்தை சேர்த்தே எடுத்துச்சென்று விடுகின்றது. இந்த வகையில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டுள்ள திட்டம்தான் இந்த இன்னுயிர் காப்போம் என்கிற திட்டம்.  விபத்து நடக்கக் கூடாது. விபத்து காரணமாக எந்த உயிரும் பறிபோகக் கூடாது என்கிற நடவடிக்கைகளில் நாம் அதிகம் கவனத்தை செலுத்த வேண்டும், அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசின் சார்பில், முதலமைச்சர் என்கின்ற முறையில் நான் தெரிவித்திருக்கிறேன்.  விபத்தில் உயிர் போவதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது – நேரமும் காலமும்தான். விபத்து நடந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து விட்டால் நிச்சயமாக அந்த உயிரை காப்பாற்றிட முடியும். காலதாமதம் ஆகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை மருத்துவர்கள் கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்வது உண்டு.  விலைமதிக்க முடியாத அந்த தருணத்தில் எடுக்கும் முடிவுகள், துரிதமான செயல்பாடுகள்தான் மனித உயிர்களை காப்பாற்றுகிறது. விபத்தை எதிர்கொள்பவர் அடையக்கூடிய மாபெரும் துன்பம் என்பதும் இந்த நேரம்தான். அப்படி சேர்க்கப்படும் இடம், அரசு மருத்துவமனையா, தனியார் மருத்துவமனையா என்ற பாகுபாடு இல்லாமல் இருந்திட வேண்டும். அதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதனால்தான் இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான ஒரு அம்சமாக – சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில், முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளோம். 48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளித்து உடனடியாக கவனித்து விட்டால், பெரும்பாலும் உயிர்கள் காக்கப்படும். அப்படியானால் அதற்கு பிறகு என்ன என்று நீங்கள் கேட்பது என்னுடைய செவிகளில் விழாமல் இல்லை. அதன்பிறகுதான் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது. அதில் சிகிச்சை பெறலாம். சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அறுவை சிகிச்சைகளும் தீவிர சிகிச்சைகளும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்த கவலையும் யாருக்கும் வேண்டாம். உயிர் காக்கக் கூடிய அவசர சிகிச்சைகள் பெரும்பாலும் முதல் 48 மணிநேர காலத்திலேயே தேவைப்படக்கூடிய சூழ்நிலையில், இந்த அவசர சிகிச்சைகளை மேற்கொள்வதில் பல தனியார் மருத்துவமனைகள் தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், விபத்துகளில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள் அருகில் இருந்தாலும், பல நேரங்களில் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்லக்கூடிய, அவர்களுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் நல்லதொரு தீர்வாகத்தான் இந்த திட்டம் இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ளது. முதல் 48 மணிநேரத்தில் தேவைப்படக்கூடிய அவசர சிகிச்சை அனைத்தையும் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளக்கூடிய நோக்கத்தோடுதான் இந்த திட்டத்தை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த திட்டத்தின்படி,* சாலை விபத்தினால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்‌ 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்.* இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. * இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, முதலமைச்சரின்‌ மருத்துவக காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள்,  பிற மாநிலத்தவர்‌, வேறு நாட்டவர்‌ என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் – அதாவது தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.* 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையற்றவராக இருந்தால் அல்லது மேலும் தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அல்லது தகுந்த வழிகாட்டுதல்களின்படி தொடர் சிகிச்சைகள் நிச்சயமாக வழங்கப்படும்.விபத்துகள் நடந்தால் அரசு எப்படி உதவும் என்பதைத்தான் இதுவரை நான் சொன்னேன். ஆனால் அரசாங்கத்தில் மிகமுக்கியமான நோக்கம் விபத்தே இருக்கக் கூடாது என்பதுதான். விபத்துக்கு மிக முக்கியமான காரணம், அதிகப்படியான வேகம்தான். சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது வேகத்தை குறையுங்கள். வேகத்தை உங்களது உழைப்பில், செயல்படுத்துங்கள். சாலைகளில், தெருவில் காட்ட வேண்டாம். அதில் உங்கள் வேகத்தை காட்ட வேண்டியதில்லை. இவை அனைத்தையும் விட சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சிவப்பு விளக்கு விழுந்தால் நிற்பதைக் கூட, தங்களுக்கு இழைக்கப்படும் அவமானமாக சிலர் நினைக்கிறார்கள். சாலை விதிகளை கடைப்பிடிப்பது என்பதை போலீசுக்கு பணிந்து போவதாக சிலர் நினைக்கிறார்கள். இல்லை, சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலமாக ஒரு தனிமனிதரின் சமூக பண்பாடு வெளிப்படுகிறது. தனிமனித ஒழுக்கம் வெளிப்படுகிறது. அத்தகைய சமூக பண்பாடு கொண்டவர்களாக மக்கள் அனைவரும் செயல்படுவதன் மூலமாக விபத்து இல்லாத தமிழகத்தை நிச்சயமாக, உறுதியாக அமைப்போம். அமைப்பதற்கு எங்களை போன்றவர்கள் மட்டுமல்ல, உங்களை போன்றவர்களும் இணைந்து கைகோர்த்து, இந்த திட்டத்திற்கு நாம் துணை நிற்போம் என்ற அந்த உறுதியை நீங்கள் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, எம்.வரலட்சுமி, எஸ்.அரவிந்த்ரமேஷ், எழிலரசன், எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் துணைத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு பணி அலுவலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழுமத்தின் இயக்குநர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சி தலைவர் ராகுல் நாத், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.உயிர் முக்கியமா? முடி முக்கியமா?இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.  சிலர் ஹெல்மெட் வாங்கி பைக் முன்னால் வைத்திருப்பார்கள். போலீசை  பார்த்ததும் போட்டுக்கொள்வார்கள். கலைஞர் முதலமைச்சராக  இருந்தபோது, பிரபல நரம்பியல் மருத்துவர் ராமமூர்த்தி கலைஞரை சந்தித்தபோது ஒரு செய்தியை சொன்னார். “நாட்டில் அதிகப்படியான ஆக்சிடெண்ட்  நடக்கிறது, சின்ன சின்ன பசங்க எல்லாம் பைக் எடுத்துட்டு போய் தலையை  உடைச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு வர்றாங்க, அதனால ஹெல்மெட்டை கட்டாயம் ஆக்க  வேண்டும்” என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். ஹெல்மெட் கம்பெனிக்கு  நான் லாபம் பார்த்து தர்றேன்னு சொல்லி ஒரு பிரசாரத்தை நடத்துவார்கள்  என்று கலைஞர் கிண்டலாக பதில் சொன்னார். உயிரை பற்றி கவலைப்படும் மக்கள்  அவர்களாகவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கலைஞர் சொன்னார். அப்போது  ராமமூர்த்தி , ‘ஹெல்மெட் போட்டா முடி உதிரும் என்று பலரும் போடாம  இருக்காங்க’ என்றார். ‘உனக்கு உயிர் முக்கியமா. முடி முக்கியமான்னு நான் கேட்டிருப்பேன்’  என்று கலைஞர் சொன்னார். எனவே, இளைஞர்கள் அனைவரும் தங்கள் உயிரை காக்க  கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இன்று கார்களின் விலைக்கு  சமமாக பைக் விலை வந்துவிட்டது. சில பைக்குகள் கார்களை விட அதிகமான விலைக்கு  விற்கப்படுகின்றன. இந்த பைக்குகளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. அதற்கான  முழுமையான பயிற்சியும் திறமையும் இருப்பவர்கள்தான் இயக்க முடியும். பையன்  கேட்கிறான் என்பதற்காக இப்படி விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொடுத்து  பிள்ளைகளை இழந்த பெற்றோர்களையும் பார்க்கிறோம். ஆகவே, பெற்றோர்களும்  தங்களது பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தருவதில் கவனமாக இருக்க வேண்டும்.  கார்களில் பயணம் செய்யும்போது, எப்போதும் சீட் பெல்ட் அணிய வேண்டும். மிக  அதிகமான வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.தமிழ்நாடு முதலிடம் வர வேண்டும்பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி நமது நாட்டிற்கே முன்னணி மாநிலமாக, பெருமை சேர்க்கக்கூடிய வகையில் நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு திகழ்ந்து  கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு  மாநிலத்தினுடைய முதலமைச்சர்களை எல்லாம் ஒப்பிட்டு, அதேபோல, தமிழகத்தின்  முதலமைச்சராக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு அந்த  பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய எனக்கு கருத்துக் கணிப்புகளின் மூலமாக அவர்கள்  எடைபோட்டார்கள். அப்படி எடைபோட்ட போது, இந்தியாவில் இருக்கக்கூடிய  மாநிலத்தின் முதலமைச்சர்களில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்  முன்னணியில் இருக்கிறார் என்று ஒரு செய்தியை போட்டார்கள். முதலமைச்சர்களில் முதல் இடம் என்று சொல்வதைவிட பெருமை என்னவென்றால்,  இருக்கின்ற மாநிலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும், அதைத்தான் எதிர்பார்த்துக்  காத்திருக்கிறோம் என்று முதல்வர் பேசினார்.வலைத்தளங்களில் மருத்துவமனை பட்டியல்இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைத்தளங்களில் (https://cmchistn.com) வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்த விவரங்களை மருத்துவமனை, அவசரகால ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104ஐ தொடர்பு கொள்ளலாம்….

You may also like

Leave a Comment

four × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi