சாலை பாதுகாப்பு மாத சிறப்பு சோதனைகளில் 1,084 வாகனங்களுக்கு ரூ.26.34 லட்சம் அபராதம்: ஆம்னி பஸ், டூரிஸ்ட் கார் பறிமுதல்

 

திருவள்ளூர், ஜன. 30: ஜனவரி 15ம் தேதி முதல் நடந்து வரும் சாலைப் பாதுகாப்பு மாத சிறப்பு சோதனைகளில் இதுவரை, 1,084 வாகனங்ககளுக்கு ரூ.26 லட்சத்து 34 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அருகே பொன்பாடியில் போக்குவரத்து துறை சோதனைச்சாவடி உள்ளது.

இங்கு, சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தலின் பேரிலும் சென்னை வடக்கு சரக இணைப் போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், திருவள்ளுர் வட்டாரப் போக்குவரத்து மோகன் ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செந்தில்செல்வம் ஆகியோர் திருத்தணி சோதனை சாவடியில் சிறப்பு வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 27 வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 480 வரி போடப்பட்டது.  இந்நிலையில், திருத்தணி சோதனை சாவடி வழியாக சென்ற ஆம்னி பேருந்தின் ஆவணங்களை பரிசோதனை செய்ததில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், திருப்பதி சேர்ந்த ஒரு நபர் டூரிஸ்ட் காரை சொந்த கார் போல மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுக்கு பதிலாக வெள்ளை நிற நம்பர் பிளேட்டை பயன்படுத்தி அரசுக்கு வரி செலுத்தாமல் முறைகேடாக இயக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு டூரிஸ்ட் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜனவரி 15ம் தேதி முதல் நடந்து வரும் சாலைப் பாதுகாப்பு மாத சிறப்பு சோதனைகளில் இதுவரை அதிக பாரம் எற்றிய 33 வாகனங்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 13 வாகனங்கள் உட்பட மொத்தம் 1084 வாகனங்ககளுக்கு ரூ. 26 லட்சத்து 34 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்