சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

தர்மபுரி: தர்மபுரி அருகே சாலையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், முக்கல்நாய்க்கன்பட்டி ஊராட்சி சவுளுக்குட்டை கிராமத்தில், மத்தன்கொட்டாயில் இருந்து சவுளுக்குட்டை வரை உள்ள தார்சாலையை, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த சாலையை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் முள்வேலி அமைத்து மறித்து, யாரும் செல்ல முடியாதவாறு தடுத்துள்ளனர். சாலை மறிக்கப்பட்டதால், சவுளுக்குட்டையில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் வெளியூர் செல்ல சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை தர்மபுரியில் இருந்து முக்கல்நாயக்கன்பட்டி வழியாக சென்ற அரசு பஸ்சை, ராஜாதோப்பு என்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சிறைபிடித்தனர். சாலையில் உள்ள ஆக்ரமிப்பை அகற்றும் வரை பஸ்சை விட மாட்டோம் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் ராஜராஜன், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.இதனையடுத்து சாலையை மறித்து குறுக்கே போடப்பட்டிருந்த முள்வேலியை அதிகாரிகள் அகற்றி, மக்கள் சென்று வரும் வகையில் சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை