சார்பதிவாளர், நகராட்சி, ஆர்டிஓ அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள் என தமிழகம் முழுவதும் விஜிலென்ஸ் ரெய்டு: லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

சென்னை: தீபாவளி நேரங்களில் பொதுமக்களிடம் இருந்து கட்டாயமாக நடைபெறும் வசூல் வேட்டையை தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், நகராட்சி, ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் என பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்ற பிறகு கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல ஊழல் அதிகாரிகள் மாற்றப்பட்டு நேர்மையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு துறைகளிலும் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு துறைகளிலும் பொதுமக்கள் நேரடியாக சென்று பயன்பெறும் அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் அதிரடி சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் கந்தசாமி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் நேற்று மாலை முதல் சோதனை நடத்தப்பட்டது.சென்னை குரோம்பேட்டையில் பல்லாவரம் நகராட்சி அலுவலகம் உள்ளது. நேற்று மாலை இந்த அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி சின்ராம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, நகரமைப்பு மற்றும் பொறியியல் பிரிவுகளில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி இரவு வரை நடந்த சோதனையின்போது, கட்டுக்கட்டாக பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் சிக்கின. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக, தீபாவளி பண்டிகைக்கு முன்னர் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர், இணை சார்பதிவாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு கணக்கில் வராத பணம் ₹53 ஆயிரத்து 130 மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழல் தடுப்பு மற்றும்கண்காணிப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் லஞ்ச  லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஜாய் டயஸ், இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி உள்ளிட்ட  10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கணினியில்  பதிவான வரவு தொகை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின்  அறையில் வைத்திருந்த பணத்தோடு ஒப்பிட்டு சோதனை நடத்தியதோடு, சோதனைச்சாவடி  ஆவணங்கள், அதிகாரிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். இந்த ஆய்வில் கணக்கில்  வராத பறிமுதல் செய்யப்பட்டது. தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக இருப்பவர் சுதாகர். இவர், தற்போது செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலராகவும் (பொறுப்பு) இருந்து வருகிறார்.செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள அரசு போக்குவரத்துத் துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன தரச்சான்று பெறுவதற்காக அதிகளவில் லஞ்சம் பெறுவதாக, அடிக்கடி புகார்கள் வந்தன. டிஎஸ்பி லட்சுமிகாந்தன் தலைமையில், அண்ணாதுரை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அலுவலகத்திற்கு வந்த பயனாளிகள், புரோக்கர்கள் என அனைவரிடமும் துருவி துருவி தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாலை 4 மணியளவில் துவங்கிய திடீர் சோதனையில்  சுதாகரின் வாகனத்தில் இருந்த பணம் உட்பட 3.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ஆனால், அவ்வழக்கில் தனது டிரைவரை சிக்க வைத்துவிட்டு, சுதாகர் தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 70,600 ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது.திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் உள்ளிட்ட 2 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். மேலும் புரோக்கர் சேதுராஜன் (50) என்பவரும் உள்ளே இருந்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தியதில், புரோக்கர் சேதுராஜனிடம் கணக்கில் வராத ₹60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.தஞ்சாவூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று மதியம் 2 மணியளவில் சோதனை துவங்கியது. அப்போது, அலுவலகத்தின் உள்ளே 3 இடங்களிலும், இரண்டு புரோக்கரிடம் கணக்கில் வராத ₹30 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இரண்டு புரோக்கர்களிடமும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர். அலுவலக ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.நாகை பால்பண்ணை சேரியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ₹51 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். உதவியாளர் மூர்த்தி என்பவரது வங்கி கணக்கிலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட கிருஷ்ணன் நண்பர் வங்கி கணக்கிற்கு ₹30 ஆயிரம் செலுத்தப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.தேனி, அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில், நேற்று மாலை 4 மணியளவில் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது நகராட்சி ஆணையர், பொறியாளர், மேலாளர், கணக்காளர், நில அளவையர்கள் உள்ளே இருந்தனர். 4 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 3 மணிநேரம் நீடித்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பணியில் இருந்த பத்திர எழுத்தர்கள், அலுவலக அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரித்தனர்.குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையில் செயல்படும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும், அலுவலக வளாகத்தில் நின்ற புரோக்கர்கள் கையில் இருந்த ஆவணங்கள், பணத்தை எறிந்து விட்டு நாலாபுறமும் ஓடினர். இவர்களில் சிலரை போலீசார் பணத்துடன் மடக்கினர். இதையடுத்து அலுவலகத்தில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சுமார் ₹1.70 லட்சம் வரை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ₹1 லட்சத்து 38 ஆயிரத்து 550 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கனிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தெற்கிருப்பு டாஸ்மாக் கடையில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ₹1 லட்சத்து 23 ஆயிரத்து 300 இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோன்று விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாலை 6 மணியளவில் தொடங்கிய ரெய்டு, இரவு 10 மணியை கடந்தும் தொடர்ந்தது.கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவை உள்ளடக்கிய பகுதிகளில் அதிகமான கல் மற்றும் மண் குவாரிகள் இயங்கி வருகிறது. இதில் அனேக குவாரிகள் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.மாலை 6 மணி முதல் நடந்த சோதனையில் நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் ஸ்டான்லியிடம் இருந்து ₹14,500 மற்றும் 5 ஸ்வீட் பார்சல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்  சிப்காட் பகுதியில் வட்டார போக்குவரத்து துறைக்கு சொந்தமான  சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ₹80,160 பணம்  கைப்பற்றப்பட்டது.தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பூட்டிய அறைக்குள் பட்டாசு, பரிசு பொருட்கள்திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில், பட்டாசு உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் அடுத்தடுத்து சிலர் சென்று வருவதை கண்காணித்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த, மேசைகள், பீரோ உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் இருந்த ஒரு அறையை திறக்க அங்கிருந்தவர்கள் மறுத்தனர். சாவி வைத்துள்ள அலுவலர் வெளியில் சென்றதாக தெரிவித்தனர். ஆனாலும், நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு அந்த அறை திறக்கப்பட்டது. அந்த அறையில், ஏராளமான பட்டாசு பெட்டிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் சிக்கியது. ஒரு சில பட்டாசு பெட்டிகளில் அதை அன்பளிப்பாக வழங்கியவரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களும் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. எனவே அங்கிருந்த பட்டாசுகள் மற்றும் பரிசு பொருட்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.தீயணைப்பு வாகனத்தில் பதுக்கல்நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தீயணைப்பு நிலைத்திற்குள் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த சோதனையில், தீயணைப்பு நிலைய அலுவலகம், தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ₹32 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை