சாராய வியாபாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

ஈரோடு, ஜூன் 22: ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கைதானவர்களை போலீசார் நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சண்முகம் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்தும் சாராயம் காய்ச்சப்படுகின்றதா? என்பது குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே, சாராயம் காய்ச்சி கைதானவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களை கடந்த 2 நாட்களாக போலீசார் நேரில் அழைத்து கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து எடுத்துக்கூறி இதுபோன்ற சம்பங்களில் எக்காரணம் கொண்டும் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக சாராயம் காய்ச்சாமல் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர்களுக்கு போலீஸ் தரப்பில் இருந்து நன்நடத்தை சான்று வழங்கப்பட்டது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தார் நன்நடத்தை சான்றிதழ் வழங்குவார் என்று போலீசார் கூறினர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு