சாப்பிட்டு வாழ்த்தும் போது உடல் வலி எல்லாம் பறந்து போகும்!

நன்றி குங்குமம் தோழி அக்கா கடைவாழை இலையில் ஆவி பறக்க வெள்ளை முத்துக்களாய் சாதம், அதற்கு மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, இறால் தொக்கு என்று சாப்பிட்டால்… சொல்லும் போதே நம் மூளை அந்த சுவையை உணரச் செய்து நாவில் எச்சில் ஊறச் செய்யும். இப்படி சுவையான உணவினை அதுவும் குறிப்பாக அசைவ உணவுகளை வீட்டு சாப்பாட்டு சுவையில் கடந்த ஒன்பது வருடமாக படைத்து வருகிறார்கள் சுமதி மற்றும் ராமலிங்கம் தம்பதியினர். இவர்கள் சென்னை கீழ்கட்டளையில் ‘ஆச்சி செட்டிநாடு மெஸ்’ என்ற பெயரில் தங்களின் வீட்டில் கீழ் உள்ள பகுதியினை உணவகமாக மாற்றி அமைத்து விருந்தோம்பல் அளித்து வருகிறார்கள்.‘‘எங்களின் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள அறந்தாங்கி. இவர் என்னுடைய அத்தை மகன் தான். இவர் சின்ன வயசிலேயே கோவைக்கு வேலை விஷயமா வந்துட்டார். அதன் பிறகு எங்க வீட்டில் பெரியவங்க எல்லாரும் பேசி தான் எங்களின் திருமணம் நடை பெற்றது. திருமணமாகி எங்களின் முதல் குழந்தை பிறந்து இரண்டு வருஷம் கழிச்சு தான் நான் சென்னைக்கு வந்தேன்.இந்த மெஸ் ஆரம்பிக்க என் கணவர் தான் முக்கிய காரணம். அவர் தான் இப்படி ஒரு மெஸ் ஆரம்பிக்கலாம்ன்னு என்னிடம் சொன்னார். அது மட்டுமில்லாமல், எங்களுக்கு பெரிய அளவில் வருமானம் எல்லாம் கிடையாது. ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டோம். 200 ரூபாய் வாடகையில் ஒரு ஓலைக்குடிசையில் தான் எங்களின் சென்னை வாழ்க்கை ஆரம்பமானது’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் ராமலிங்கம்.‘‘நான் என்னுடைய 13 வயசில் வீட்டை விட்டு வேலைக்காக கோவைக்கு வந்தேன். இங்கு கிட்டதட்ட பல வருஷம் மெஸ்சில் தான் சாப்பிட்டு இருக்கேன். அந்த காலத்தில் 3 ரூபாய் 50 காசுக்கு அன் லிமிடெட் சாப்பாடு தருவாங்க. சில சமயம் அந்த சாப்பாடு வாங்க கூட கையில் காசு இருக்காது. அதனால் முழு சாப்பாடு இல்லாமல் அரை சாப்பாடு வாங்கி சாப்பிடுவேன். அப்பதான் என் மனசில் ஒரு எண்ணம் ஏற்பட்டது. மெஸ் நடத்துபவர்கள் மட்டும் தான் வயிறு மற்றும் மனசு நிறையும் அளவுக்கு சாப்பாடு கொடுக்கிறாங்க. இதே போன்ற ஒரு மெஸ்சினை ைகயில் கொஞ்சம் காசு சேர்ந்த பிறகு நடத்தணும்ன்னு என் மனதில் பதிவு செய்து கொண்டேன். அதன் பிறகு நிறைய வேலைப் பார்த்திருக்ேகன். இதற்கிடையில் எனக்கு திருமணமாச்சு. சில காலம் என் உறவினர் ஒருவரின் நகைக்கடையில் வேலை பார்த்தேன். அதன் பிறகு ஒரு ஓட்டலில் சர்வர் வேலை கிடைச்சது. அதே ஓட்டலில் என் தம்பி சைனீஸ் உணவின் மாஸ்டரா வேலைப்பார்த்து வந்தான். ஓட்டலில் சர்வர் வேலை செய்தாலும், நானும் நல்லாவே சமைப்பேன். காரணம் பல காலம் தனியாக இருந்ததால், எனக்கான உணவினை நான் தான் சமைத்துக் கொள்வேன். ஓட்டலில் வேலை பார்த்ததால், சமைக்கவும் கத்துக்கிட்டேன். அந்த சமயத்தில் தான் எவ்வளவு காலம் நாம் ஒருவரின் கீழ் வேலை பார்ப்பது என்று சிறிய அளவில் ஒரு தள்ளுவண்டி கடையை ஆரம்பிச்சேன். அதை என் மனைவி தான் முழுக்க முழுக்க பார்த்துக் கொண்டாங்க. சாப்பாடு சமைப்பது எல்லாம் அவங்க வேலை. வருமானம் பார்ப்பது என்னுடைய வேலையாக இருந்தது. அதில் கிடைத்த கொஞ்ச வருமானத்தைக் கொண்டு சிறிய அளவில் இடம் எடுத்து ஒரு பிரியாணி மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் கடையை துவங்கினேன். மதியம் மற்றும் இரவு நேரம் மட்டும் தான் கடையை நடத்தி வந்தோம். இதில் பிரியாணி மட்டுமில்லாமல், ஃபிரைட் ரைஸ், சிக்கன் 65, சில்லி சிக்கன் கொடுத்து வந்தோம். கிட்டத்தட்ட 17 வருஷம் இந்த கடையை நடத்தினோம். இந்த கடையை ஆரம்பித்த போது நானும் என் மனைவியும் தான் முதலில் எல்லாமே செய்தோம். ஃபிரைட் ரைஸ் செக்‌ஷன் என் தம்பி பார்த்துக் கொண்டார். இந்தக்கடையில் வந்த வருமானம் கொண்டு பக்கத்தில் ஒரு இடம் வாங்கி அங்கு வீடு கட்டினோம்’’ என்றவரை தொடர்ந்த சுமதி மெஸ் ஆரம்பித்த காரணத்தை குறித்து பகிர்ந்து கொண்டார். ‘‘நாங்க செட்டியார் பரம்பரையை சேர்ந்தவங்க. அதனால் எங்க வீட்டில் அசைவ உணவு மட்டுமில்லை, சைவ உணவும் வித்தியாசமா இருக்கும். மேலும் என் கணவரின் நீண்ட கால ஆசை மெஸ் வைத்து நடத்த வேண்டும் என்பது. நாங்க ஆரம்பித்த காலத்தில் பெரிய அளவில் பிரியாணி ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் இருந்ததில்லை. இப்போது தெருக்கு தெரு முளைக்க ஆரம்பித்துவிட்டதால், நாங்க மெஸ் ஆரம்பிக்கலாம்ன்னு திட்டமிட்டோம். எங்க வீட்டின் கீழ் பகுதி காலியாக இருந்ததால் அங்கு முதலில் சைவ உணவகம் ஆரம்பித்தோம். மூன்று வருடம் காலை மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கி வந்தோம். ஆரம்பத்தில் சமையல் மட்டுமில்லாமல் பார்சல் கட்டுவது என எல்லாம் நாங்களே பார்த்துக் கொண்டோம். இட்லிக்கு மூன்று கிலோ அரிசி மாவு போட்டு ஆரம்பித்த நாங்கள் ஒரு கட்டத்தில் 20 கிலோ இட்லி மாவு அரைக்க ஆரம்பிச்சோம். இட்லிக்கு மாவு ஆட்டுவது என்னுடைய வேலை என்பதால், அவ்வளவு பெரிய கிரைண்டரை பயன்படுத்தி மாவு ஆட்டியதால் எனக்கு காலப்போக்கில் முதுகு வலி ஏற்பட ஆரம்பிச்சது. இதனால் சரியாக நிற்க கூட முடியாமல் அவதிப்பட்டேன். என்னுடைய கஷ்டத்தைப் பார்த்த இவர்… சைவம் செய்வதால் இவ்வளவு பிரச்னை. அதனால் நாம் அசைவ உணவினை கொடுக்க ஆரம்பிக்கலாம்ன்னு ெசான்னார். பொதுவாக நிறைய பேர் அசைவ உணவில் தான் பெரிய வேலைன்னு நினைப்பாங்க. ஆனால் அப்படி இல்லை. இறால், நண்டு, மீன் எல்லாம் வாங்குமிடத்திலேயே சுத்தம் செய்து கொடுத்திடுவாங்க. அதை நாம் நன்றாக அலசினால் போதும். அதனால் எங்களின் மெஸ் முழுக்க அசைவ செட்டிநாடு மெஸ்சாக மாறியது. வீட்டிற்கு கீழே கடை என்பதால், மேலே சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வச்சிடுவோம். பிறகு கீழே அதை சமைப்பது தான் வேலை என்பதால் என்னுடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறியது. கடையும் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதற்கிடையில் கொரோனா பிரச்னை மற்றும் என் கணவருக்கும் காலில் அடிபட்டதால், எங்களால் இரண்டு வருடம் கடையை சரியாக நடத்த முடியவில்லை. இப்போது கடந்த ஒரு வருடமாக மீண்டும் முழு மூச்சாக இதில் ஈடுபட்டு வருகிறோம்.உணவு பொறுத்தவரை நாங்க எந்த வித காம்பிரமைசும் செய்வதில்லை. சுவை மற்றும் தரமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியா இருக்கிறோம். அதே சமயம் வருபவர்கள் வயிறார சாப்பிடணும் அவ்வளவு தான். காரணம் நாங்க இந்த சாப்பாட்டிற்காக பல நாள் கஷ்டப்பட்டு இருக்கிறோம். இங்கு முழு சாப்பாடு 90 ரூபாய். அதில் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, நண்டு மசால், இறால் மசால் எல்லாம் வரும். இது தவிர சாம்பார், ரசம், மோர், கூட்டு பொரியலும் உண்டு. மட்டன் சுக்கா, நெத்திலி ஃபிரை, இறால், போட்டி மசாலா போன்றவற்றை தனியாக வாங்கிக் கொள்ளலாம். இரவு நேரம் பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, இட்லி, முட்டை தோசைன்னு  வெரைட்டி தருகிறோம். எங்களுடையது முழுக்க முழுக்க செட்டிநாடு சுவை. உணவு கொஞ்சம் காரமாக இருக்கும். உணவில் அதிக அளவு மிளகு, பூண்டு சேர்ப்பது வழக்கம். மசாலாப் பொருட்கள் பொறுத்தவரை நாங்க எதுவுமே கடையில் வாங்குவதில்லை. சோம்பு பொடி, மிளகு, சீரகப்பொடி, மிளகாப்பொடி, தனியா தூள் என அனைத்தையும் தனித்தனியே அரைத்து வைத்திருக்கிறோம். மஞ்சள் தூள் கூட நாங்க கடையில் வாங்குவதில்லை. இப்படி எல்லாமே வீட்டில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் என்பதால், வீட்டு சாப்பாடு சுவையினை உணரலாம். அந்த சுவைக்காகவே பலர் வெளியூரில் இருந்தெல்லாம் எங்க கடையை தேடி சாப்பிட வராங்க. அதை நினைக்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. பலர் காலை வேளை உணவையும் கொடுக்க சொல்லி கேட்கிறாங்க. ஆனால் எங்களால் முடியாது என்பதால், பகல் மற்றும் இரவு நேர உணவினை மட்டுமே கொடுத்து வருகிறோம். இதையே நல்ல படியா செய்தா போதும். எங்களுக்கு வேறு கிளைகள் துவங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இப்போதைக்கு இல்லை. அதே சமயம் மற்ற உணவுகளை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை. நம்ம பாரம்பரிய உணவினை மட்டுமே சுவையாக கொடுக்க வேண்டும்’’ என்றவர் இடியாப்பம் பாயா உணவினை அடுத்த மாதம் முதல் பரிமாறும் எண்ணத்தில் இருக்கிறார். செய்தி: ப்ரியாபடங்கள்: கிருஷ்ணமூர்த்திபடங்கள்: ஜி.சிவக்குமார்

Related posts

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!