சாத்தூர் நகர் பகுதியில் இயங்காமல் உள்ள போக்குவரத்து சிக்னல்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சாத்தூர், ஏப்.6: நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், சாத்தூர் நகர் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் கிருஷ்ணன் கோயிலில் இருந்து துணை மின் நிலையம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோடு அமைந்துள்ளது. இந்த சாலையில் அதிகமான எண்ணிக்கையில் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை செல்கின்றன. இதனால் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இச்சாலை பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மதுரை பேருந்து நிறுத்தம், நகர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் நான்கு வழிச்சாலைக்கும், வலது புறம் பேருந்து நிலையத்திற்கும் சாலைகள் பிரிந்து செல்கின்றன. இடதுபுற சாலை வெம்பக்கோட்டைக்கு செல்கிறது.

வெம்பக்கோட்டை செல்லும் இந்த சாலையில் நான்கு வழிச்சாலையை சந்திக்கிறது. மேலும் இந்த சாலையில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மக்கள் சாத்தூர் நகர் மெயின் ரோட்டுக்கு வந்துதான் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல முடியும். இதனால் மதுரையில் இருந்து சாத்தூர் வழியாக அல்லது திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு சாத்தூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், லாரிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள், அப்பகுதியில் சாலைகள் இருபுறமும் பிரிந்து செல்கிறது என்பதை அறிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. எனவே அதிவேகமாக வரும் போது, உள்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திடீரென விபத்தில் சிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி பகுதிகளில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன.

சாத்தூர் மெயின் ரோட்டில் 3 அரசு உதவி பெறும் பள்ளிகள், வட்டாச்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றங்கள் இரண்டு, காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் என போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க மெயின் ரோட்டில் நகர் காவல் நிலையம், அரசு மருத்துவ மனை, ஸ்டேட் பேங்க், எட்வர்டு நடுநிலைப்பள்ளி, பேருந்து நிலையம், எத்தல்ஹர்வி ரோடு சந்திப்பு, வெம்பக்கோட்டை ரோடு மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அமைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இந்த போக்குவரத்து சிக்னல்கள் இயங்காமல் உள்ளன. இந்த சிக்னல்களை சரி செய்து காலை முதல் இரவு வரை இயங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்று சாத்தூர் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் போலீசார்களை நியமித்து, போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை