சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு தந்தை, மகன் ரத்தக்கறை படிந்த துணிகள் குப்பைத் தொட்டியில் வீச்சு: லத்தியால் அடித்து சித்ரவதை என சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் தகவல்

மதுரை: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், தடயத்தை மறைக்க அவர்களின் ரத்தக் கறை படிந்த துணிகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன என சிபிஐயின் கூடுதல் துணை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ல் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  ஏற்கனவே சிபிஐ தரப்பில் கடந்த 25.9.2020ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12ம் தேதி நீதிபதி என்.நாகலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் 400 பக்க கூடுதல் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கடந்த 19.06.2020 அன்று மாலை, காமராஜர் பஜாரில் இருந்து சட்டவிரோதமாக அழைத்து சென்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். காவல் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட ரத்த கறைகள், சட்டை, லத்தி, பஞ்சுகள், கைலி உள்ளிட்டவற்றில் இருந்த ரத்தக்கறைகள் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரதான வாசல் கதவை அடைத்துவிட்டு, லத்தியால் இருவரும் பின்புற புட்டத்தில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். கொடூரமான காயங்களால் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது. காவல் நிலையத்தின் சுவர்களிலும், தரையிலும் மற்ற இடங்களிலும் சிதறிக் கிடந்த இருவரின் ரத்தக் கறைகளை சுத்தம் செய்யுமாறு பென்னிக்சை போலீசார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்ட போலீசார், அனைவரும் ஒரே மாதிரியான பொதுவான நோக்கத்தில் குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளனர். ரத்தக்கறை படிந்த துணிகள், கைலி உள்ளிட்டவற்றை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். காவல் நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தக்கறை ஆகியவை பென்னிக்ஸ், ஜெயராஜுடையது என்பது தடயவியல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் ரேவதி, பியூலா ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து சாட்சியம் அளித்துள்ளனர். குற்றச்சாட்டுக்கு போதுமான ஆவண, தடயவியல் ஆதாரங்கள் உள்ளன. பொய் வழக்கு பதிவு செய்ததோடு, ரத்தகறை படிந்த ஆடைகளை மறைத்துள்ளனர். இருவரையும் காவல் நிலையத்தில் அடைத்து கொடூரமாக துன்புறுத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

இளைஞர்கள், பெண்களுக்கு எல்லா வழியிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இணைந்து பணிபுரிவோம்: டாடா குழும தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

அக்.4ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 27 சிப்காட் தொழிற்பூங்காக்கள் தொடக்கம்: மேம்படும் பொருளாதார வளர்ச்சி – உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு ; அடுத்தாண்டிற்குள் 22 தொழில் பூங்காக்களை உருவாக்க அரசு திட்டம்