சாத்தான்குளத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம் குழந்தைகள் நடவடிக்கையை பெற்றோர் கண்காணித்தாலே குற்றங்கள் குறையும்

சாத்தான்குளம், ஜூலை 14: சிறுவர்கள், இளைஞர்கள் நடவடிக்கைகளை பெற்றோர், ஊர் பெரியவர்கள் தினமும் கண்காணித்தாலே குற்றங்கள் குறையும் என்று சாத்தான்குளத்தில் நடந்த சமுதாய நல்லிணக்க கூட்டத்தில் டிஎஸ்பி அருள் பேசினார். சாத்தான்குளம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சமுதாய நல்லிணக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் சாத்தான்குளம் முத்து, தட்டார்மடம் பவுலோஸ், நாசரேத் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெஞ்ஞானபுரம் எஸ்ஐ விஜய்தாஸ் வரவேற்றார். டிஎஸ்பி அருள் தலைமை வகித்து பேசியதாவது: சமுதாய பெரியவர்கள், குற்றங்களை கண்காணித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிறுவர்கள், இளைஞர்களின் நடவடிக்கைகளை பெற்ேறாரும், ஊர் பெரியவர்களும் தினமும் கண்காணித்தாலே குற்றங்கள் குறையும். தவறான செயலில் ஈடுபடுவது தெரிய வந்தால் தக்க ஆலோசனைகளை வழங்கி அவர்களை மீட்டெடுங்கள். சமுதாய விழாக்களில் மற்றவர்கள் குறித்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். சமுதாயம் குறித்து வெளிக்காட்டுவதை தவிர்த்தாலே பிரச்னைகள் எழாது. பெரிய அளவில் பிரச்னை எழும் என்று தோன்றினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதற்கு பெரியோர் ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்வழிப்படுத்த வேண்டும். பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து இந்த சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும், என்றார். கூட்டத்தில் நாசரேத் வணிக பேரவை சங்க செயலாளர் செல்வன், சாத்தான்குளம் வர்த்தக சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ், நகர காங். தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால், சாத்தான்குளம் ஒன்றிய சமக செயலாளர் ஜான் ராஜா, பாஜ நகர தலைவர் ஜோசப், மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜேஷ், மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணை தலைவர் ராம்மோகன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், விசிக ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பாமக இளைஞரணி செயலாளர் கணேசன், இந்துமக்கள் கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பொன்பாண்டி, மாவட்ட தலைவர் செல்லத்துரை, தச்சமொழி பஞ். தலைவர் பிரேம்குமார், நாசரேத் காமராஜ் ஆதித்தனார் கழக மாவட்ட செயலாளர் ஐஜினஸ்குமார், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை சாத்தான்குளம் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Related posts

பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைகால் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை