சாதனை சிறுமி விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசிநாள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பங்காற்றும், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு, விருதை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் வெளியாகியுள்ளன. இவ்விருதை பெறுவதற்கு தகுதியுடையவர்கள், வரும் டிசம்பர் 31-ம் தேதிப்படி 5 வயதுக்கு மேல் 18 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் மற்றும் வேறு ஏதேனும் வகையில் சிறப்பான சாதனை செய்திருக்க வேண்டும். மேலும், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை தீர்வு காண்பதற்கான ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை செய்திருப்பவராக இருந்தாலும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மாநில அரசின் விருதுக்கு தேர்வாகும் ஒரு பெண் குழந்தைக்கு பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். இந்த விருதை பெற விண்ணப்பிக்கும் குழந்தையின் பெயர், பெற்றோர் முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை ஒரு பக்கத்துக்கு மிகாதவாறு உரிய ஆதாரங்களுடன் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் காவல்துறை ஆகிய ஏதேனும் ஒர் அலுவலகத்தில் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….

Related posts

1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ORS மற்றும் 14 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சங்கம் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர கலை விழாவுக்காக ரஜினிகாந்த் உடன் சங்க நிர்வாகிகள் ஆலோசனை