சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் இமையத்துக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: திராவிட இயக்க எழுத்தாளர் இமையத்திற்கு  இந்த ஆண்டுக்கான சாகித்ய  அகாடமி விருது வழங்கப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்து  தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு மத்திய அரசு  சார்பில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், 20 மொழிகளில்  2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்,  தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்திற்கு விருது வழங்கப்படுகிறது.  செல்லாத பணம் என்ற நாவலுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.  சாகித்ய அகாடமி இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக விருது  கருதப்படுகிறது. இதற்காக எழுத்தாளர் இமையத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்: எளிய மக்களின்  வாழ்வியலைத் தனது  எழுத்துகளால் அழகியலோடு வெளிப்படுத்தும் திராவிட  இயக்கப் படைப்பாளர் திரு.  இமையம் அவர்களின் ‘செல்லாத பணம்’ புதினத்திற்கு  சாகித்ய அகாடமி விருது  கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கொள்கை சார்ந்த பயணத்துடனான அவரது படைப்புகள் மென்மேலும் பல  விருதுகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன். பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட மாநில  செயலாளர்: திராவிட பாரம்பரிய குடும்ப பின்னணியிலிருந்து தமிழக எழுத்துலகிற்கு  அறிமுகமான இமையம், தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின்  வாழ்வியல் பிரச்சனைகளை சிறுகதை மற்றும் நாவல்களாக எழுதி வருகிறார்.  அவருடைய படைப்பில் சமீபத்தில் வெளியான “செல்லாத பணம்” நாவலுக்கு மத்திய  அரசின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கிறது. உழைக்கும்  மக்களின் வாழ்வியலோடு இணைந்த சிறந்த பல படைப்புகளை தொடர்ந்து  படைத்திடவும், பல்வேறு விருதுகளை பெறவும் வாழ்த்துகிறோம்.இவ்வாறு அவர்கள்  கூறியுள்ளனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ம்  ஆண்டு பிறந்தவர் இமையம். இயற்பெயர்  அண்ணாமலை. தற்போது அரசுப் பள்ளி  ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.  ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவலின் மூலம்  தமிழ் எழுத்துலகில் பரவலாக  அறியப்பட்ட இமையம், ‘கோவேறு கழுதைகள்’ ,  ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’, ‘செடல்’,  ‘செல்லாத பணம்’ ஆகிய நாவல்களை  எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள்  தொகுக்கப்பட்டு ‘மண் பாரம்’,  ‘கொலைச்சேவல்’, ‘சாவு சோறு’, ‘வீடியோ மாரியம்மன்’,  ‘நன்மாறன் கோட்டைக் கதை’  ஆகிய தொகுப்புகளாக வெளியாகியிருக்கின்றன.  இவரது முதல் நாவலான கோவேறு  கழுதைகள் 1994ல் வெளியானபோது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு