சளி, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

சேலம், செப்.2: சேலம் மாவட்டத்தில் தொடர்மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு ‘வரும்முன் காப்போம்’ என்ற அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கிய கோடை காலத்தின் தாக்கம் ஜூன் மாதம் வரை நீடித்தது. இதையடுத்து தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே அவ்வப்போது மழை பெய்தது. இதற்கிடையில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மேலும் சிலநாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் தொடரும் மழையால் சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது. சேலத்தை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் அங்காங்கே மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் திடீரென மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலை காரணமாக சளி, காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகளவில் வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. பெரும்பாலான தொற்று நோய்கள் பருவ மழைக்காலங்களில் பரவுகிறது. எனவே வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் மாவட்டத்தில் நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தளவில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். அதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு தனி வார்டுகளில் ஏராளமான படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.
இதில் மிகவும் முக்கியமாக பொதுமக்களை பொறுத்தவரை வீட்டின் அருகில் உபயோகிக்காமல் உள்ள பழைய பொருட்கள், தேங்காய் சிரட்டை, குடம், அம்மிக்கல் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்காமல் தவிர்க்க வேண்டும். குடியிருக்கும் பகுதியைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தௌித்து தூய்மையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

சளி காய்ச்சல் தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தாமாக மருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதே போல் மருத்துவரின் பரிந்துரையில்லாமல், தனியார் மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடும் பழக்கத்தை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து காய்ச்சல் இருமல் சளி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் பாதிப்புகள் காரணமாக வழக்கத்தை விட, கூடுதலான எண்ணிக்கையில் பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இப்படி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்ைதகள் மற்றும் முதியவர்களாக உள்ளனர். அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் முதியவர்களை பாதிப்புகள் அதிகளவில் தாக்கும். எனவே வீட்டிலுள்ள குழந்தைளையும், முதியவர்களையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை