சர்வதேச ஆய்வு மையத்துக்கு பறந்த 4 பேர் 60வது ஆண்டில் 600வது வீரர் விண்வெளி பயணம்

கேப் கேனவரல்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் புதிதாக 4 வீரர்கள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டனர். இதில் பயணம் செய்த ஜெர்மனி வீரர், விண்வெளிக்கு சென்ற 600வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விண்வெளியில் பூமிக்கு மேல் 360 கிமீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், கடந்த 1998ல் கட்டி முடிக்கப்பட்டது. இதில் தங்கியிருந்து ஆய்வுகள் செய்வதற்காக பல்வேறு நாட்டு வீண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதில் தங்கி 6 மாதங்களாக ஆய்வு செய்த 4 வீரர்கள் 2 நாட்களுக்கு முன்தான் பூமிக்கு திரும்பினர். இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் ஆய்வுப் பணிகள் முடித்துக் கொண்டு கடந்த வாரம் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பயணம் தாமதமானது. பின்னர், 2 நாட்களுக்கு முன்பு பூமிக்கு திரும்பினர். இதையடுத்து, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதியதாக 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பியது. இவர்கள் பயணித்த பால்கன் ராக்கெட், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரவில் பறந்து இரவை பகலாக்கியதை பார்த்து அனைவரும் உற்சாகம் அடைந்தனர். வழக்கமாக, பகலில் மட்டுமே விண்கலம் ஏவப்படும். ஆனால், முதல் முறையாக இது இரவில் அனுப்பப்பட்டும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில்  ஒரு மூத்த விண்வெளி வீரர், 2 இளைய வீரர்கள் உள்பட 4 பேர் சென்றுள்ளனர். இந்த 4 வீரர்கள் சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி நிலைய சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இவர்கள் அங்கு 6 மாதம்  தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. தற்போது, விண்வெளிக்கு சென்றுள்ள 4 வீரர்களில் ஜெர்மனியை சேர்ந்த மத்தியாஸ் மவ்ரெரும் ஒருவர். கடந்த 60 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்ற 600வது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். விண்வெளியின் சுற்று வட்டப்பாதைக்கு முதன் முதலில் சென்று திரும்பிய விண்வெளி வீரர் என்ற பெருமையை ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின் பெற்றுள்ளார். கடந்த 1961ம் ஆண்டு, ஏப்ரல் 12ம் தேதி ரஷ்யாவின் ‘வோஸ்டோக்- 1’ என்ற விண்கலத்தில் சென்ற யூரி தான் விண்வெளியில் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை புரிந்தார். இவர் சென்ற விண்கலம், பூமியை 108 நிமிடங்கள் சுற்றியது.இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ராஜா வி.சாரிநேற்று முன்தினம் விண்வெளிக்கு சென்ற குழுவில் இடம் பெற்றுள்ள ராஜா வி.சாரி (44), இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தெலங்கானாவில் பிறந்தவர். அமெரிக்காவின் கொலம்பசில் பள்ளி படிப்பை முடித்த இவர், 1995ல் பட்டப்படிப்பு முடித்தார். பின்னர், கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியில் சேர்ந்து, 1999ல் விமான பொறியியல் பட்டம் பெற்றார். 2001ல் விமானப்படையில் சேர்ந்தார். 2007ம் ஆண்டு நடந்த ஈராக் போரில் பங்கேற்றார். கடந்த 2017ல் விண்வெளி வீரருக்கான தேர்வில் பங்கேற்றார். தற்போது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு 6 மாத ஆய்வுக்காக சென்று, இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்….

Related posts

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை