சர்வதேச அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் புதுகை கலெக்டர் தலைமையில் நடந்தது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், 47-வது சர்வதேச அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்பதற்கான, மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ‘நான் முதல்வன்” என்ற திட்டத்தின் மூலம் திறமையான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குவதன் மூலம் திறமை வாய்ந்த மனிதர்களாக உருவாக்கி வருகிறார். அதன்படி 2024ம் ஆண்டு செப்டம்பரில் பிரான்ஸில் உள்ள லியான் நகரில் 47வது சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்திறன் போட்டிகளில் பங்குபெறும் வகையில் தகுதி வாய்ந்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நான் முதல்வன் தளத்தின் கீழ் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் ஜூலை 14ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் மாநில அளவில் நடைபெறும் திறன் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து மண்டல அளவிலான திறன் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறும் போட்டியாளர்கள் செப்டம்பரில் நடைபெறவுள்ள இந்திய அளவிலான திறன் போட்டியிலும் பங்கு பெறுவார்கள். மொத்தம் உள்ள 55 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் போட்டியில் பங்கேற்க 10 வயது நிரம்பிய தனித்திறன் பெற்ற உயர்நிலைக்கல்வி, தொழில்பயிற்சி கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவ சார்பு துறைகளில் படித்துக்கொண்டிருப்பவர்கள் மற்றும் தனித்திறன் பெற்றவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்கள் என ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்தப் போட்டி குறித்த விபரங்களை ‘நான் முதல்வன்” இணையதளத்திலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு மாநில அளவிலும், இந்திய அளவிலும் ஊக்க பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் உலக திறன் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி மற்றும் அனைத்து உதவிகளும் அரசால் செய்யப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திறன் வாய்ந்த தகுதி உள்ள அனைவரும் பங்கேற்று வெற்றி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (திறன் மேம்பாடு) ராமர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ). வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்