சர்க்கரை ஆலை சாம்பல் டிராக்டர் சிறைபிடிப்பு

கடலூர், அக். 9: கடலூர் முதுநகர் அருகே வழிசோதனை பாளையம், ராமாபுரம், ஆண்டையார்தோப்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தற்போது, ஆண்டையார்தோப்பு விவசாயிகள் வாழை கன்று பயிரிட்டுள்ளனர். வழக்கமாக இந்த வாழை கன்றுகளுக்கு நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து சத்துக்காக சாம்பல் வழங்குவது வழக்கம். ஒரு லோடு ரூ.3500க்கு வாங்கி வாழை கன்றுகளுக்கு விவசாயிகள் உரமாக இட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்க்கரை ஆலையில் இருந்து வந்த சாம்பலை விவசாயிகள் வாழை கன்றுகளுக்கு வைத்துள்ளனர். பின்னர், மறுநாள் பார்த்தபோது, சுமார் 5 ஏக்கரில் சாம்பல் கொட்டப்பட்ட வாழைக்கன்றுகள் அனைத்தும் கருகியிருந்தன. இதனால் மீண்டும் சாம்பல் கொட்ட வந்த டிராக்டரை கடந்த 2 நாட்களாக விவசாயிகள் சிறைபிடித்து வைத்துள்ளனர். ஆனால், இதுவரை அதிகாரிகளோ, ஆலை நிர்வாகமோ பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த வாழை கன்றுகள் கருகியுள்ளதால், எங்களது ஒரு வருட வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணில் ரசாயனம் பாய்ந்துள்ளதால் உடனடியாக வாழை நடமுடியாது. வேறு பயிரை நட்டு மண்ணில் உள்ள நச்சுத்தன்மையை போக்கிய பின்னர் தான் வாழை விவசாயம் செய்ய முடியும். இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி ரூபன் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ஆண்டையார்தோப்பு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு, விவசாயிகளையும், தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகளையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு