சருமப் பிரச்னைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!

உண்ணும் உணவு, செய்யும் வேலை, வாழ்க்கை முறை, தூக்கமில்லா இரவுகள், மொபைல், கணினி பயன்பாடு என ஒரு காலத்தில் 35 வயதிற்கு மேல் தலை தூக்கிய அத்தனை சருமப் பிரச்னைகளும் இன்று 20களிலேயே வந்துவிடுகின்றன. இதோ வீட்டிலேயே சருமத்தைப் பராமரிக்க சில எளிய ஆலோசனைகள்.

சருமக் கருமை

ஒரு ஸ்பூன் வெள்ளரிப் பிஞ்சின் சாற்றில் சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாறு, சிறிது மஞ்சள் பொடியும் கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் சென்ற பிறகு முகத்தை தண்ணீரில் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை என்று சில மாதங்கள் இதைச் செய்துவந்தால் கருமை (நிறம்) நீங்கும். சம அளவு பாதாம் எண்ணெயும், தேனையும் முகத்தில் பூசி வர கருமை மாறும். கரிசால் இலையை அரைத்து அவ்விழுதை உடலில் தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் தோல் பொன்னிறமாக மாறும்.

முகப்பரு நீங்க…

*பன்னீரில் பஞ்சை நனைத்து இரண்டு மூன்று தடவை முகத்தில் தடவி வரவும்.
*ஆரஞ்சுத் தோலை தண்ணீர் விட்டு அரைத்து, அதை பூசி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.
*கருஞ்சீரகத்தை வினிகருடன் சேர்த்து அரைத்து பூசலாம்.
*ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி பொடியாக்கிய பட்டையை கலந்து தடவி வந்தால் பருக்கள் மறையும்.

*பூண்டை சிறிதளவு அரைத்து பூசி வந்தால் பருக்கள் மறையும்.
*வேப்ப இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து பூசினால் பருக்கள் மறையும்.
*அரை தேக்கரண்டி சந்தனத்துடன் சிறிது மஞ்சள் தண்ணீர் விட்டு அரைத்து பூசி வந்தால் பருக்கள் மறையும்.
*புதினா அரைத்த சாற்றை இரவு தினந்தோறும் தடவிவந்தால் பருக்கள் மறைவதுடன் முகவறட்சியை குறைக்கும்.
*முந்திரியை சிறிதளவு எடுத்து காய்ச்சாத பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி உலர்ந்தபின் வெந்நீரில் கழுவி வர பருக்கள் மூன்று நான்கு தினங்களுக்குள் மறைய தொடங்கும்.
*முதல் நாள் இரவு எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவி மறுநாள் காலையில் வெந்நீரில் கழுவி வர பருக்கள் குறையும்.
*வெங்காயத்தை பாதியாக நறுக்கி முகப்பரு உள்ள இடத்தில் அழுத்தி தேய்த்து வந்தால் இரண்டு மூன்று நாட் களில் முகப்பரு மறைந்துவிடும்.

பருத் தழும்பு மறைய…

*எலுமிச்சைப் பழச்சாற்றில் தேங்காய் எண்ணெயும் சந்தனமும் ஒரே அளவு எடுத்து கலந்து இரவில் பூசி வந்தால் தழும்பு மறையும்.
*சிறிது பாதாம் பருப்பை அரைத்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி பாலும், ஒரு மேஜைக்கரண்டி ஆரஞ்சுச்சாறும், கேரட்சாறும் எடுத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் தழும்பு மறையும்.
*ஒரு மேஜைக்கரண்டி பப்பாளிக்காய் மசித்து எடுத்து முகம் கழுத்தில் பூசி இருபது நிமிடம் கழித்து கழுவிவர பருக்கள் மறையும்.
*பழுத்த தக்காளியுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து முகம் கழுத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து கழுவவும்.
*ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் உலர்ந்தபின் கழுவிவந்தால் பருக்கள் மறையும். அரைத்த புதினா இலைகளை முகத்தில் பூசி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கழுவினால் பருக்கள் மறையும்.

வறண்ட சருமத்திற்கு…

*ஒரு மேஜைக்கரண்டி கடலை மாவுடன் சிறிது மஞ்சள்தூள், கால் தேக் கரண்டி பொடி செய்த ஆரஞ்சுத் தோல், ஒரு தேக்கரண்டி தயிர், மற்றும் பால் சேர்த்து முகத்தில் பூசிவர வறண்ட சருமம் வளமாய் இருக்கும்.

பருவினால் ஆன குழி உள்ளவர்களுக்கு…

*ஒரு மேஜைக்கரண்டி தக்காளிச் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து கழுவி வரவும்.
*சிறிய ஐஸ்கட்டிகளை குழியுள்ள இடங்களில் சிறிது நேரம் தடவி குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி வர வேண்டும்.

வெயிலினால் ஏற்பட்ட முகக்கருமைக்கு…

*இரண்டு தேக்கரண்டி தக்காளிச் சாற்றுடன் நான்கு மேஜைக்கரண்டி மோருடன் கலந்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவிவரவும்.
*ஒரே அளவு ஆலிவ் எண்ணெயும் வினிகரும் கலந்து முகத்தில் பூசி குளிக்கலாம்.

முகச் சுருக்கங்கள் மறைய…

*தேங்காய் எண்ணெயை முகத்தில் பூசி மறுநாள் காலை கழுவி வந்தால் சுருக்கங்கள் மறையும்.
*மசித்த தக்காளி, பப்பாளியை முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் பலன் கிடைக்கும்.

கண் கருவளையங்களுக்கு…

*ஒரு கப் தக்காளி சாற்றுடன் சிறிதளவு புதினா இலைகளுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து தினமும் குடித்து வந்தால் நாளடைவில் மாறும்.
*ஒரு தேக்கரண்டி தக்காளி சாற்றுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் கடலை மாவும் சேர்த்து பூசி வரலாம்.
*வெள்ளரி அல்லது உருளைக் கிழங்கு சாற்றில் நனைத்த பஞ்சை கண்ணைச் சுற்றி தடவிவரஇரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மாற்றம் தெரியும்.

குறிப்பு: வெங்காயம், எலுமிச்சை, வினிகர் போன்றவைகளைப் பயன்படுத்தும் முன் உங்கள் சருமத்திற்கு இவைகளால் எந்த அலர்ஜியும் உண்டாகிறதா என சரும சோதனை செய்து பார்த்துவிட்டு பயன்படுத்தவும். சரும சோதனைக்கு உங்கள் ஆள்காட்டி விரலில் இவைகளைத் தொட்டு காதிற்கு பின்புறத்தில் ஒரு பொட்டு போல் வைத்துவிட்டு 48 மணி நேரம் காத்திருக்கவும். அரிப்பு, எரிச்சல், சிவந்த கீறல்கள் போன்ற பிரச்னைகள் உண்டானால் இவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
– காகை ஜெ.ரவிக்குமார்

Related posts

குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்