சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

 

தஞ்சாவூர், ஜன.9: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு நெல்லில் சம்பா பருவத்தில் அதிக மகசூல் பெற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நெல் ப்ளூம் தெளிப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நாளை நடக்கிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பயிர் மேலாண்மை இயக்ககம், பயிர்வினையில் துறையால் தயாரிக்கப்படும் நெல் ப்ளூம் (சம்பா பருவத்திற்கு ஏற்ற பேரூட்ட, நுன்னுட்ட, வளர்ச்சி ஊக்கிகள் கலந்த கலவை) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாளை 10ம்தேதி (புதன்கிழமை) மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

விவசாயிகள் பங்கு பெற்று பயனடையுமாறு தெரிவித்துள்ளனர். இதில் நெல் ப்ளூம் பூஸ்டர் தன்டு உருளும் பருவத்தில் ஏக்கருக்கு நான்கு கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கரைத்து இலை வழியாக தெளிப்பதனால் கருக்கா, பதர்கள் உருவாவது குறைத்து மகசூல் அதிகரிக்கிறது. இந்த எளிய தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.

மேலும் இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர்களின் மகசூலை அதிகரிக்க பயன்படும் குருவை சாகுபடிக்கு உகந்த நெல் ரீப், கரும்பில் மகசூலை அதிகரிக்க உகந்த கரும்பு பூஸ்டர், பயிர்களின் மகசூல் அதிகரிக்க உகந்த பயிறு ஒன்டர், பருத்தியில் பூக்கள் மற்றும் சப்பைகள் உதிர்வதை குறைக்கும் பருத்தி பிளஸ், நிலக்கடலையில் பொக்கு கடலையை குறைத்து மகசூலை அதிகரிக்க உகந்த நிலக்கடலை ரிச் மற்றும் தென்னையில் சப்பைக் கொட்டுதலைத் தடுக்க தென்னை டானிக் போன்ற பயிர் பூஸ்டர்கள் பயன்பாடு மற்றும் பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிர்வினையியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தில், இணை பேராசிரியர் ராஜா பாபு, உதவி பேராசிரியர் பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்கள். விவசாயிகள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய , மற்றும் முன்பதிவு செய்ய முனைவர் ராஜா பாபு ( பயிர் வினையில் துறை இணை பேராசிரியர்) 9171717832 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்