சம்பா அறுவடை துவங்கி விட்டதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உடனே திறக்க வேண்டும்

 

தரங்கம்பாடி,ஜன.19:தரங்கம்பாடி பகுதியில் சம்பா அறுவடை துவங்கி விட்டதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஈச்சங்குடி விவசாயிகள் நலச்சங்க தலைவர் துரைராஜ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தரங்கம்பாடி பகுதியில் ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துகட்டி, சங்கரன்பந்தல், இலுப்பூர், நல்லாடை, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, கொத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யபட்ட விவசாயிகள் அதை அறுவடை செய்யும் பணியை தொடங்கி விட்டனர்.

எனவே அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் வாங்கபடும் நெல்லின் விலையை அறிவிக்க வேண்டும். மேலும் அதிக அளவில் நெல் மூட்டைகளை போடும் விவசாயிகளிடம் மொபைல் முறையில் நேரடியாக சென்று நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

நெல்அறுவடை மிஷின்களுக்கு வாடகையை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்த வேளாண் பொறியியல்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அறுவடை மிஷின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் பெல்ட் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணிக்கு 2500 என்றும் டயர் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணிக்கு 1800 என்றும் முடிவு செய்யபட்டுள்ளது. விவசாயிகளிடம் இதற்கு மேற்பட்ட தொகையை வசூல் செய்யாமல் அரசு கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு