சம்பளம் வழங்காததால் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை சுகாதார பணியாளர்கள் முற்றுகை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: சம்பளம் வழங்காததால் பணியை புறக்கணித்து காஞ்சிபுரம் மாநகராட்சியை டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் திடீரென முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வீடு, வீடாக சென்று தொற்று அறிகுறிகள் தென்படுகிறதா, சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த 250 தற்காலிக பணியாளர்கள், தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தலா 5 முறைக்கு மேல் கணக்கெடுப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களுக்கு  முறையான சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, ஆணையர் லட்சுமி அளித்த வாக்குறுதியின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர். அதன் பின்னர், அவர்களுக்கு ஒரு சில மாதத்துக்கான சம்பளம் மட்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் தாங்கள் பணிபுரிந்த காலத்தில் தங்களுக்கு வழங்க வேண்டிய முறையான சம்பளம் முழுவதுமாக இதுவரை வழங்கவில்லை. குறிப்பாக 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறி, தற்காலிக சுகாதார பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் அவர்கள், திடீர் முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அந்த நேரத்தில், மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் லட்சுமி, அங்கு இல்லை. அதனால், அவரை நேரடியாக சந்தித்து அவரிடம் முறையிட நேற்று இரவு 7 மணி வரை தற்காலிக சுகாதார பணியாளர்கள் காத்துக்கிடந்தனர். பின்னர், ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, விரைவில் அனைவருக்கும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் களப் பணியாற்றிய தங்களுக்கு உரிய சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே தற்காலிக சுகாதார பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்