சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: இரு அவைகளிலும் அமளியால் பரபரப்பு

புதுடெல்லி: சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரு அவைகளிலும் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2021 நவம்பர் 4ம் தேதிக்குப் பின்னர் (137 நாட்களுக்கு பின்) முதன்முறையாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளை ஒன்று ரூ.50 அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் கடந்தாண்டு அக்டோபர் 6ம் தேதிக்குப் பின்னர் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த விலை உயர்வைக் கண்டித்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் விலையுயர்வைக் கண்டித்து பேசினர். மாநிலங்களவையிலும் அவை தொடங்கியவுடன் விதி எண் 267-ன் கீழ் விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. ஆனால், அவைத் தலைவர் அனுமதி தராத காரணத்தால், அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் எண் இணைக்க கடைசித் தேதி குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி சக்திசிங் கோஹில் நோட்டீஸ் அளித்தார். பாஜக எம்பி ராம் குமார் வர்மா மாநிலங்களவையில், மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுதல் தொடர்பாக குடும்ப வருமான உச்சவரம்பை மறுபரிசீலனை செய்தல் தொடர்பாக அறிவிப்பு நோட்டீஸ் அளித்தார். தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று  2வது நாளாக தொடங்கியது. தியாகிகள் தினத்தை முன்னிட்டு மக்களவை சபாநாயகர் ஓம்  பிர்லா, சுதந்திர போராட்ட வீரர்கள் அமர் ஷஹீத் பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கையா  நாயுடு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இரு அவைகளிலும் ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கிய போது, சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல் மாநிலங்களவையிலும் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு