சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்

சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல் நலக்குறைவால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார்.  தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்து அதிர வைத்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (87). இவர், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் இறங்கி  சரிபடுத்துவார். அதனாலேயே இவருக்கு டிராபிக் ராமசாமி என்று பெயர் வந்தது. சென்னையில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக ஓடிக்கொண்டிருந்த மீன்பாடி வண்டிகளை வழக்கு தொடர்ந்து ஒழித்தார். அரசியல் கட்சியினர் சாலைகளில் அனுமதியின்றி வைக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார். அது மட்டுமில்லாமல், இவர் தொடர்ந்த பல பொதுநல  வழக்குகளில் சென்னை ஐகோர்ட் பல திருப்புமுனை தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், டிராபிக் ராமசாமிக்கு ஏப்ரல் 4ம் தேதி திடீரென உடல் குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி அவரது சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், அவர் உடல்நலம் தேறி வந்தது. ஆனால், நுரையீரல் பாதிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், நெகட்டிவ் என வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென அவரது உடல்நிலை மீண்டும் மோசமானதை  தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு,  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு 7.45  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு பாரிமுனையில் உள்ள இன்று நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை